பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376 ⚫ போதி மாதவன்

‘கருத்தோடிருங்கள்! கருத்தின்மை அழிவிற் கொண்டு சேர்க்கும்; கருத்துடைமை அமர வாழ்வளிக்கும். விழிப் போடிருங்கள்! மடிமைக்கு இடம் கொடுக்க வேண்டாம்!’ என்ற கருத்தை அடிக்கடி கூறி வற்புறுத்துவது வழக்கம் அப்போதும் அதையே தெளிவுபடுத்திக் கூறினார் : ‘ஓ பிக்குக்களே! துறவி கருத்தோடு, விழிப்போடு, இருக்க வேண்டும். துறவி இவ்வுலகில் இருக்கும்போது உடலின் ஆசையாலும், புலன்களின் வேட்கையாலும், தவறான ஆராய்ச்சியாலும் எழும் துக்கத்தை வெல்ல வேண்டும். நீங்கள் எதைச் செய்தாலும் மன உறுதியுடன் செய்யுங்கள். உண்ணல், பருகல், நடத்தல், நிற்றல் முதலிய வற்றிலும், உறங்கல் அல்லது விழித்திருத்தல், பேச்சு அல்லது மௌனம் ஆகிய எதிலும் கருத்தோடு நடந்து கொள்ளவும்!’[1]

மேலும் மெய்ஞ்ஞானம் பெறுவதற்குரிய ஏழு கருவிகளான ஸதி (ஞாபகம்), தரும விசாரம் (திரிபிடக சாத்திர ஆராய்ச்சி), வீரியம் (இடைவிடா முயற்சி), ஆனந்தம் (உள்ளம் இன்பத்தில் திளைத்தல்), சாந்தி (சித்தத் தெளிவால் வரும் அமைதி) சமாதி (சிந்தையை ஒரு நிலைப் படுத்தல்), உபட்சை (எதையும் சமமாகப் பாவித்தல்) என்ற ‘ஸப்த போத்தியாங்கங்கள் பற்றியும் அவர் விளக்கி யுரைத்தார்.

கண்டோர் உள்ளத்தைக் கவரக்கூடிய பேரழகுள்ள தாசி அம்பபாலி அங்கு விரைவிலே வரக்கூடும் என்பதால், பிக்குக்கள் துறவிகளேயாயினும் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு விழிப்போடு இருப்பதற்காக ஐயன் அந்த நேரத்தில் கருத்துடைமை பற்றியும், உள்ளப் பண்பாடு பற்றியும் எச்சரிக்கை செய்தார் என்று புத்தகோஷர் என்ற உரையாசிரியர் கூறுவர்.


  1. மகா - பரி- நிருவாண சூத்திரம்.