பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 377

மாஞ்சோலையை அடைந்த அம்பபாலி, சோலையுள்ளே சிறிது தூரம் சென்றதும், தன் வாகனத்தையும், சேடிகளையும் ஒருபுறம் நிறுத்திவிட்டு, அறவாழி அந்தணரை நோக்கி நடந்து சென்றாள். அழகு வழியும் வதனமும், இளமை ததும்பும் அங்கங்களும் அவளுடைய பேரெழிலை விளம்பரஞ் செய்து வசீகரித்தபோதிலும். அன்று அவள் மதிப்புயர்ந்த அணிகள், ஆடைகள் எதுவுமின்றித் தூய்மையான எளிய உடையே அணிந்திருந்தாள் அவள் உள்ளத்தில் சாந்தி நிலைத்திருந்தது. பயபக்தியோடு ஐயன் அமர்ந்திருந்த மரத்தடியை நோக்கி மெல்ல மெல்ல நடந்து சென்றாள்.

தூரத்தில் வரும்போதே அமலர் அவளைக் கண்டு கொண்டார். அவர் பிக்குக்களை நோக்கி, ‘ஒரு நுகத்தடியில் பூட்டப் பெற்ற இரு காளைகளாக விளங்குபவை புலன்களும் அவை நாடிச் செல்லும் பொருள்களும். இரண்டையும் குறித்த அளவுக்குக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். கட்டுப்பாடில்லை யென்றால், இரண்டுக்கு மிடையே ஆசைகள் வளர ஆரம்பிக்கின்றன. ஏனெனில் இரண்டும் பொருத்தமில்லாதபடி ஒன்றுக்கொன்று மிஞ்சிய காளைகள்... ஆதலால் தான், “இதயத்தை அடக்கி வையுங்கள், கட்டுப்பாடில்லாமல் அதை விட்டுவிடக் கூடாது” என்று நான் கூறுகிறேன்.’[1] மன்னர்களோடு மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்த அம்பபாலி சிந்தை நிறைவுற்றுச் சாந்தி பெற்றுத் திகழ்வதைக் கண்டு அவர் வியப்படைந்தார். இளவயது, பெருஞ் செல்வம், பேரழகு ஆகியவற்றோடு, தன்னைச்சுற்றி நிறைந்திருந்த இன்பங் களில் ஆழ்ந்து திளைத்திராமல், அக்கணிகைமகள், முகத் திலே சிந்தனையைத் தேக்கிக்கொண்டு, உள்ள உறுதி-


  1. ‘ஃபோ– ஷோ– ஹிங்– த்ஸாங்–கிங்’ என்ற சீன நாட்டுப் புத்த சரிதை.

போ –24