பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382 ⚫ போதி மாதவன்

அடியார்களையும் அழைத்து வந்து, அன்போடு உபசரித்தாள். அவர்கள் ‘போதும்! போதும்!’ என்று தடுக்கும் வரை அக்காரவடிசிலும் பணிகாரங்களும் பரிமாறப்பட்டன. விருந்துக்குப் பின்னால், அம்பபாலி பகவரின் பக்கத்திலிருந்து கொண்டு, ‘தேவா! புத்ததேவரைத் தலைவராய்க் கொண்ட பிக்குக்களின் சங்கத்திற்கு நான் இந்த மாளிகையைத் தத்தம் செய்கிறேன்!’ என்று கூறித் தான் வசித்து வந்த மாபெரும் மாளிகையையும் தானம் செய்து விட்டாள். குருதேவரும் அதை ஏற்றுக்கொண்டு, அவளுக்கு உறுதுணையாக விளங்கக்கூடிய அறிவுரைகள் புகன்று, அரிதில் விடை பெற்றுக் கொண்டு வெளியேறினார்.

பெலுவம்

அம்பபாலியின் ஆம்ரவனத்திலே தாம் விரும்பிய காலம் வரை தங்கியிருந்து விட்டுப் பெருமான் அடுத்தாற் போல் வைசாலிக்கு அருகேயிருந்த பெலுவம் என்னும் ஊருக்குச் சென்றார். பெரும்பாலான அடியார்களைத் தலைநகருக்கு அருகே பல இடங்களில் தங்கியிருக்கச் சொல்லிவிட்டு அவர் மட்டும் மாரிக்காலம் முழுவதும் அந்தக் கிராமத்திலேயே வசித்திருந்தார். அப்போது அவர் மெய்ஞ்ஞானம் பெற்று நாற்பத்தைந்து ஆண்டுகளாயின. அவருடைய கடைசி வருஷா காலத்தை அவர் பெலுவத்திலேயே கழித்தார்.

அங்கே அவருக்குத் திடீரென்று கடுமையான நோய் தோன்றியது. கொடிய வேதனைகளால் மரணமும் நேரக் கூடிய நிலை ஏற்பட்டது. எனினும் அவர் எல்லை யற்ற அடக்கத்துடன் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டார் சங்கத்தைச் சேர்ந்த அடியார் பலரையும் சந்தித்து, இறுதியாக அவர்களுக்கு உபதேசம் செய்யாமல் உலக வாழ்வை நீத்தல் உசிதமில்லை என்று கருதியதால், தாகதர் தமது உள்ள வலிமையையெல்லாம் ஒருங்கே