பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 387

சிரத்தை, வீரியம், சித்தம், மீமாம்சை[1] ஆகிய நான்கு ‘இருத்தி பாதங்கள்’ என்ற வழிகளில் இடைவிடாது ஒழுகி வந்தால் என்ன பயன் விளையும் என்பதுபற்றி அவர் எடுத்துரைத்தார். அந்த நால்வகை இருத்தி ஆற்றல்களும் கைவரப்பெற்று, அவற்றை ஒரே சாதனமாக்கி, அந்தச் சாதனத்தை உபயோகித்துக்கொள்ளும் பயிற்சி பூரணமாக ஏற்பட்டுள்ள ஒருவர், தாம் விரும்பினால், உலகில் கற்பகாலம் வரை வாழ்ந்திருக்க முடியும் என்றும், ததாகதராகிய தாம் அத்தகைய வல்லமை பெற்றிருப்பதால் தாம் விரும்பினால், அவ்வாறு வாழ்ந்திருக்க முடியும் என்றும் பெருமான் கூறினார்

ஆனந்தருக்கு எப்பொழுதுமே புத்த தேவர் உலகில் உயிரோடு உலவி வரவேண்டும் என்ற ஆவலுண்டு. எனவே அவர் பெருமானைப் பார்த்து, உலக மக்கள், தேவர்கள் யாவருடைய நலனுக்காகவும் ததாகதர் உலக முடிவு (கற்பம்) வரை வாழ்ந்திருக்க வேண்டும் என்று வேண்டினார். பெருமான் தாம் கூறியதை மீண்டும் மும்முறை திரும்பக் கூறியும், ஆனந்தர் அவர் திருவுளத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை. எனவே அவர் ஆனந்தர் தம்மை விட்டு அகன்று சென்று தமக்கு உசிதமான வேலையைக் கவனிக்கும்படி சொன்னார். ஆனந்த தேரரும் அவ்வாணைப்படியே எழுந்து நின்று


  1. சிரத்தை– இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற தீவிர ஆர்வம் முதலில் வேண்டும்.
    வீரியம்– இடைவிடாத முயற்சி வேண்டும்.
    சித்தம்– தீய சிந்தனைகள் யாவும் அகன்று, சித்தம் பரிசுத்தமாக வேண்டும்.

    மீமாம்சை– தாம்கொண்ட முடிவுகள் சரியானவையா என்று பகுத்தறிந்து பார்க்கும் ஆராய்ச்சி வேண்டும்.