பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 391

காகவும் தருமம் நீடித்து நிலைபெறுவதற்காக அதை வெளியே பரவச் செய்யுங்கள்!

‘ஓ பிக்குக்களே, வாருங்கள்! உங்களுக்கு மீண்டும் நினைவுறுத்துகிறேன்; ஒன்றாகச் சேர்க்கப்பெற்ற பொருள்கள் (பஞ்ச பூதங்களின் கலப்பால் தோன்றுபவை) யாவும் அழியும் தன்மை யுள்ளவை. நீங்கள் கருத்தோடு முக்திக்கு வழி தேடுங்கள்! ததாகதர் முற்றிலும் மறைவதற்கு இன்னும் அதிக காலமில்லை. இதிலிருந்து மூன்று மாதங்கள் கழிந்ததும் ததாகதர் முற்றிலும் மறைந்து விடுவார்!’

போதியடைவதற்குரிய முப்பத்தேழு தத்துவங்களையும் பெருமான் அந்தக் கூட்டத்தினர்க்கு நினைவுறுத்தினார். அவர் தமது தருமத்திற்குரிய–தாமே கண்டுணர்ந்த–அவ்வாய்மைகளை முன் பலமுறை கூறியது போல் மீண்டும் வகைப்படுத்திக் கூறினார். நான்கு சதிப்பிரஸ் தானங்கள், நான்கு சம்யக் பிர தானங்கள், நான்கு இருத்தி பாதங்கள், ஐந்து இந்திரியங்கள், ஐந்து பவங்கள், ஏழு போத்தியாங்கங்கள், அஷ்டாங்க மார்க்கம் என்ற எட்டு முறைகள்[1] ஆகியவற்றை அவர் விளக்கினார். முடிவாக அவர் கூறியதாவது :

‘என் ஆயுள் பூர்த்தியாகிவிட்டது; என் வாழ்வு அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கி யுள்ளது; நான் உங்களை விட்டுப் பிரிகிறேன்; என்னையே நான் துணையாய்க் கொண்டு செல்கிறேன்! ஓ பிக்குக்களே, கருத்தோடிருங்கள்! புனிதமாயிருங்கள்! சிந்தனை நிறைந்திருங்கள்!


  1. இவற்றின் விவரங்களை ‘அஷ்டாங்க மார்க்கம்’ என்ற பகுதியிலே (இயல் : 9, 10) காண்க.