பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394 ⚫ போதி மாதவன்

வைத்த பன்றி இறைச்சியும் சமைத்து வைத்திருந்தான். பெருமான் அவன் வீட்டுக்கு வந்து அமர்ந்த பின்பு, அவனை அழைத்து, ‘சந்தா! நீ தயாரித்துள்ள உலர்ந்த பன்றி இறைச்சியை எனக்கு மட்டும் படைக்கவும். மற்ற அரிசிப் பொங்கல், பணிகாரங்கள் முதலியவற்றைப் பிக்குக்களுக்குப் படைக்கவும்’ என்று சொல்லிவைத்தார். உணவருந்திய பின்னும் அவர் பக்தனை அழைத்து, ‘சந்தா! உன்னிடம் எஞ்சியுள்ள பன்றி இறைச்சி முழுவதையும் ஒரு புழையில் கொட்டி மூடிவிடவும். என்னைத் தவிர வேறு எவரும் அதை உண்டு ஜீரணித்துக் கொள்ள இயலாது!’ என்றும் கூறினாராம். சந்தன் ஐயனுடைய ஆணைப்படியே செய்துவிட்டுத் திரும்பிவந்து, அவர் அருகே அமர்ந்திருந்து, மீண்டும், உபதேசம் பெற்றான், பிறகு ஐயன் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு சீடர்களுடன் வெளியே சென்றார்.

சந்தன் அளித்த உணவே பெருமான் பூவுலகில் புசித்த கடைசி உணவாகும். அன்று உணவருந்தியதிலிருந்தே அவருக்குக் கடுமையான சீதபேதி ஏற்பட்டது. அன்பன் ஆர்வத்தோடு அளித்த உணவினால் அவருக்கு நோயும் மரணமும் நேர்ந்தன என்று உலகில் எவரும் கருத வேண்டாம் என்றும், சந்தனும் அதை எண்ணி வருந்தலாகாது என்றும் பெருமானே பின்னால் ஆனந்தரிடம் கூறியுள்ளார்.

பெருமான் சந்தனுடைய வீட்டில் அருந்தியது உலர்ந்த பன்றி இறைச்சிதானா என்பதே சந்தேகமாயுள்ளது. பாலி மொழியிலும் வடமொழியிலுமுள்ள விவரங்களிலிருந்து மொழிபெயர்த்தவர்கள் மூலத்தின் சொற்களை மாற்றிப் பொருள் கொண்டிருத்தல் கூடும் என்று சிலர் கருதுகின்றனர். ‘ஸுஸ்க ஸுகர மார்தவ–ஸுகர மாத்தவ’ என்ற சொற்றொடருக்கு ‘உலந்த பன்றி இறைச்சிபோல் மென்மையான’ என்று தான் பொருள்