பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 395

என்றும், அது மக்கள் புசிக்கக்கூடிய ஒருவகைக் காளானை குறிக்கும் என்றும் ‘புத்த மீமாம்சை– Buddha Mimamsa’ என்ற ஆங்கில நூலொன்றில் குறிக்கப்பெற்றுளது. குடல் நோயைக் குணமாக்கும் காளான் அல்லது ஒரு வகைக் கிழங்கினையே சந்தன் சமைத்திருக்கவேண்டும் என்று சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். அதுவரை பெருமானுக்கு நடந்த விருந்துகளிலெல்லாம் இனிப்பான அரிசிப் பொங்கலும், பணிகாரங்களும் குறிக்கப்பெற்றிருக்கின்றனவேயன்றி, வேறு புலால் சேர்ந்த கறி வகைகளைப் பற்றிய குறிப்பேயில்லை. எனவே அவர் அருந்திய கடைசி உணவும் சைவ உணவாகவே இருந்திருக்கும் என்று கருத இடமுண்டு.

மீண்டும் பயணம்

பெருமானுக்கு வயதும் எண்பதாகியிருந்தது. வயிற்றுக் கடுப்பும் அதிகமாகிப் பெரும் வேதனையளித்தது. எனினும் வழக்கம்போல் அளவுகடந்த பொறுமையுடன் அவர் துயரத்தையெல்லாம் தாங்கிக்கொண்டு, ‘ஆனந்தா, நாம் குசீநகருக்குச் செல்வோம்!’ என்று கூறி, மீண்டும் பிரயாணமானார். வழியில் அவருக்குக் களைப்பு மிகுந்ததால், அவர் பாதைக்கு அருகிலிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டார். அப்போது, ‘தாகம் அதிகமாயுளது!’ என்று கூறி அருகேயிருந்த ஓடையிலிருந்து நீர் கொண்டு வருமாறு அவர் ஆனந்தரை வேண்டினார். மேற்கொண்டு சிறிது தூரம் சென்றால், குகுஷ்டை நதியில் நல்ல நீர் பருகலாம் என்று ஆனந்தர் சொல்லியும் அவர் கேட்கவில்லை. ஆகவே ஓடையிலிருந்து ஆனந்தர் தண்ணீர் கொணர்ந்து கொடுக்கப் பகவர் அதைப் பருகித் தாகவிடாயைத் தணித்துக் கொண்டார்.

மரத்தடியில் மாதவர் அமர்ந்திருப்பதைக் கண்ட புக்குசா என்ற வாலிப மல்லர் ஒருவர் அருகே சென்று