பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

398 ⚫ போதி மாதவன்

வேண்டுகிறேன்!’ என்று அவர் சொல்லியதால், அன்னை அறையை விட்டு வெளியே சென்றார்.

அன்றிரவு முடிவில் காலைக் கதிரவன் தோன்று முன்னே, சாரீபுத்திரர் தலைநிமிர்ந்து எழுந்து தம்மைச் சுற்றியிருந்த பிக்குக்களைப் பார்த்து, ‘நாற்பத்து நான்கு ஆண்டுகளாக நீங்கள் என்னுடன் வாழ்ந்து வந்தீர்கள். இவ்வளவு காலத்திலும் நான் உங்களில் எவருக்காவது பிழை செய்திருந்தால், என்னைப் பொறுத்தருள வேண்டும்!’ என்று கேட்டுக் கொண்டார். பிக்குக்களும் அவரே தங்களை மன்னிக்க வேண்டும் என்றனர். குறித்த நேரம் வந்து விட்டதை அறிந்த சாரீபுத்திரர் திரிசரணங்களைக் கூறித் தியானத்தில் ஆழ்ந்து, ஆனந்த பரவசராகி, அவ்வண்ணமே நிருவாண நிலையை அடைந்துவிட்டார். இது காறும் தனித்து இலங்கிக் கொண்டிருந்த நீர்த்துளி பிரகாசமான பெருங் கடலுள் சேர்ந்து அதனுடன் கலந்து விட்டது!

சாரீபுத்திரரின் உடல் வாசனைத் திரவியங்கள் ஊட்டப்பெற்றும், அலங்கரிக்கப் பெற்றும் ஏழு நாட்கள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப் பெற்றிருந்த தாயும், ஆயிரக்கணக்கான ஆடவரும், பெண்டிரும், தேவர்களும் வந்து அதற்கு வணக்கம் செலுத்திய தாயும் பின்னர் பிரேத தகனம் மிக்க விமரிசையாக நடைபெற்ற தாயும், அந்தியக் கிரியை முடியும்வரை பிக்குக்களின் தரும் உபதேசம் இடைவிடாது நடந்து வந்ததாயும் பர்மா நாட்டு வரலாறுகளில் காணப்படுகின்றது. தரும சேநாபதியின் இளைய சகோதரராயும், சிறந்த பிக்குவாயும் விளங்கிய சந்தர் தமது சகோதரரின் அஸ்தியையும், திருவோடு முதலியவற்றையும் புத்தபகவரிடம் கொண்டுபோய்ச் சமர்ப்பித்து விவரம் கூறினார்.

பகவர் தமது மெய்யடியாரின் அஸ்தியை வலது கையிலே ஏந்திக்கொண்டு, பிக்குக்கள் அனைவருக்கும் சாரீபுத்திரரின் மேன்மையைப்பற்றி விளக்கிக் கூறினார்.