பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 399

அவன் மற்றொரு புத்தரைப்போல் தானே தரும உபதேசம் செய்ய வல்லவன். நண்பர்களைப் பெறுவது எப்படி என்பதை அவன் அறிவான். அவன் சென்றவிட மெல்லாம் கூட்டங் கூட்டமான மக்கள் அவனுடைய போதனையைக் கேட்கத் தொடர்ந்து சென்றனர். என்னைத் தவிர, அவனுக்கு இணையானவர் எவருமிலர்!... அருமையான பிக்குக்களே, எனது ஞான புத்திரன் சாரீபுத்திரனை நினைவூட்டும் இந்த அஸ்திகளை மீண்டும் ஒரு முறை பாருங்கள்!’ என்று பெருமான் பெருமிதத்தோடு வியந்து பேசினார்.

சாரீ புத்திரரின் நினைவுச் சின்னமாக ஜேதவனத்தில் ஒரு சேதியம் அமைக்கும்படியும் பெருமான் ஏற்பாடு செய்தார்

மௌத்கல்யாயனர் நிருவாணமடைதல்

கடைசி முறையாகப் புத்ததேவர் இராஜகிருகத்தில் தங்கியிருந்த சமயம் மௌத்கல்யாயனரும் நிருவாண மடைந்தார்.

இராஜகிருகத்திற்கு அருகில் இஸிகிலிமலைக் குகை ஒன்றில் மௌத்கல்யாயனர் தங்கிவந்தார். அவருடைய இடைவிடாத பிரசாரத்தினாலும், ஊக்கத்தாலும், தைரியத்தாலும், ஆற்றல்களாலும் நகர் முழுவதும் பௌத்த தருமத்தின் பசுஞ்சோலையாக விளங்கிவந்தது. இதனால் மனக் கொதிப்படைந்து குமுறிக் கொண்டிருந்த புறச் சமயிகள் பலர், ஆடையில்லாத துறவிகளாக விளங்கிய அவர்கள் காழ்ப்புக் காரணமாக மௌத்கல்யாயனரைக் கொலை செய்யவே தீர்மானித்துவிட்டார்கள். இரகசியமாகக் கொலைஞருக்குப் பணம் கொடுத்துத் தங்களுடைய தீய கருத்தை நிறைவேற்ற அவர்கள் ஏற்பாடும் செய்தனர்.