பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

402 ⚫ போதி மாதவன்

அவைகளை மீண்டும் அடக்கம் செய்து வைப்பதற்காக, இரண்டு லட்சம் ரூபாய்க்குமேல் செலவிட்டு மகா போதி சங்கத்தார் சாஞ்சியிலே புதிதாக அழகிய விகாரை யொன்றை அமைத்திருந்தனர். 1952, நவம்பர் 29-ஆம் தேதி உலகப் பௌத்தர்களின் கலைப்பண்பு மகாநாடு சாஞ்சியிலே நடைபெற்றது. பாரதரத்னம், பேராசிரியர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

மறுநாள் புத்ததேவரின் முதன்மையான சீடர்களான சாரீபுத்திரர், மௌத்கல்யாயனர் இருவருடைய அஸ்திகளும் அடங்கிய தங்கப் பேழை சாஞ்சிக் குன்றுக்கு ஊர் வலமாக எடுத்து வரப்பெற்றது. ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அவ்வமயம் கூடியிருந்தனர். சீனா, ஜப்பான், இலங்கை, தாய்லந்து, பர்மா முதலிய பல நாட்டுப் பௌத்த பிக்குக்களும் பிக்குணிகளும் சீவர ஆடை யணிந்து வந்து அப்புனிதத் திருநாளில் கலந்துகொண்டனர். சாஞ்சிக் கிராமமும், விகாரை அமைந்திருந்த குன்றும் தொலைவிலுள்ள சிறு குன்றுகளும் அதிரும்படி கண்டாமணிகள் முழங்கின. மந்திர கீதங்கள் ஒலித்தன. பிக்குக்களும், பிக்குணிகளும் தரையில் விழுந்து வணங்கவும் பல்லாயிரம் மக்கள் பணிந்து போற்றி நிற்கவும், இந்திய மகாபோதி சங்கத்தின் தருமகர்த்தா புனித பிக்கு ஸ்ரீநிவாச நாயகத்தேரரும், இலங்கை மகாபோதி சங்கத் தலைவர் புனிதபிக்கு டாக்டர் வஜிராணன மகாதேரரும் அஸ்திகளை இந்தியப் பிரதம மந்திரி பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு விகாரையுள் அடக்கம் செய்தனர். பிக்குக்கள் பௌத்த சூத்திரங்களைப் பாராயணம் செய்து கொண்டிருக்கையில், இலங்கை உள்நாட்டு மந்திரி, திரு. ஏ. ரத்ன நாயகா, சாரீபுத்திரர், மௌத்கல்யாயனர் இருவருடைய ஞாபகர்த்தமாகப் புதிய தீபம் ஒன்றை ஏற்றி வைத்தார். விகாரைக்கு வெளியே இளம் அரசமரக் கன்றுகளும் நடப்பெற்றன. அவைகளில்