பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபதாம் இயல்

மகா - பரி - நிருவாணம்

‘மருளறுத்த பெரும்போதி மாதவரைக்
கண்டிலமா(ல்)என் செய்கேம் யாம் !
அருளிருந்த திருமொழியா(ல்) அறவழக்கம்
கேட்டிலமா(ல்)என் செய்கேம் யாம்!
பொருளறியும் அருந்தவத்துப் புரவலரைக்
கண்டிலமா(ல்)என் செய்கேம் யாம்!’

–வீரசோழியம்

குசீநகர்

பெருங் கூட்டமான, பிக்குக்களோடு புத்ததேவர் குசீநகரில் ‘உபவர்த்தனம்’ என்ற சாலமரச் சோலையை அடைந்தார். அப்போது அவர் மிகவும் களைப்படைந்திருந்ததால், ஆனந்தரை அழைத்து, ஓரிடத்தில் இரட்டைச் சாலமரங்கள் இருந்ததைச் சுட்டிக்காட்டி, அவைகளின் இடையே தமக்குக் கட்டிலைப் போட்டுவைக்கும்படி கூறினார். உடனே ஆனந்தர் அவ்வாறே செய்தார். பெருமான் வடதிசையில் தலைவைத்து, வலது புறமாகத் திருமேனியைச் சாய்த்துக் கொண்டு, கட்டில் மீது சயனித்துக்கொண்டார். அப்போது அவர் நல்ல பிரக்ஞையுடனும் அமைதியுடனுமே விளங்கினார். சீரிய சிங்கம் பாறைமீது படுத்திருப்பது போல அவர் காணப்பெற்றார்.

இரட்டைச் சால மரங்களிலும் கொத்துக் கொத்தாகப் பூக்கள் குலுங்கிக் கொண்டிருந்தன. காலமில்லாத காலத்திலே பூத்த அந்த மலர்கள் பெருமான் திருமேனி மீது உதிர்ந்து கொண்டிருந்தன. வானத்திலிருந்து மந்திர