பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

408 ⚫ போதி மாதவன்

புகுந்து ஆனந்தரை அழைத்துச் சென்றார். ‘போதும், ஆனந்தா! நீ துயரப்பட வேண்டாம்; அழாதே!’ என்று சொல்லிப் பகவர் ஆனந்தருக்கு ஆறுதல் கூறினார் அன்புக்குரிய சகல பொருள்களையும் ஆப்தமானவர்களையும் முடிவில் பிரிந்து தானாக வேண்டும் என்பதைத் தாம் பன்முறை பலவிதமாக எடுத்துப் போதித்து வந்ததை அவர் ஞாபகப்படுத்தினார். பல வழிகளிலும் தாம் உலகுக்கு அறிவுறுத்திய தரும காயம்[1] நிலைத்திருக்கையில், தமது ஊனுடல் அழியாமற் காத்திருக்க வேண்டி யதில்லை என்பதை அவர் தெளிவாக விளக்கிக் கூறினார். புலன்களின் ஆசைகளைக் கைவிட்டு, சந்தோஷம், மயக்கம் அறியாமை ஆகிய தீமைகளைக் கடந்து, கருத்தோடு இடைவிடாது முயன்றால், ஆனந்தரும் பிறவிப் பிணி நீங்கி விடுதலை பெறுவது உறுதி என்பதைப் பெருமான் எடுத்துக் காட்டினார். பற்பல ஆண்டுகளாக ஆனந்தர் தம் அருகிலேயே இருந்து அரும்பெருந் தொண்டுகள் ஆற்றியதையும் அவர் வாயாரப் புகழ்ந்தார்.

சிறு நகராகிய குசீநகரத்தில் ஐயன் உலக வாழ்க்கை நீத்தல் சிறப்பில்லை யென்றும், இராஜகிருகம், சம்பா, சிராவஸ்தி, சாகேதம், கௌசாம்பி, காசி முதலிய பெரு நகரங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் ஆனந்தர் சொன்னார். அதற்கு மறுமொழியாகப் பெருமான் குசீநகர் முற்காலத்தில் மகா சுதர்சனன் என்ற புகழ் பெற்ற மன்னனின் தலைநகராயிருந்த வரலாற்றையும், அதன் பெருமையையும் எடுத்துக் காட்டினார்.

பின்னர், குசீநகரத்து மல்லர்களுக்கு அன்றிரவு தாம் பரி நிருவாணம் அடையப்போவதை அறிவிக்கும்படி பெருமான் கட்டளையிட்டார். அச்சமயம் ஏதோ பொதுக் காரியமாக ஊர்க்கூட்டம் கூட்டியிருந்தனர். பெரு-


  1. காயம்-உடல்; தரும காயம்- தருமமாகிய உடல்