பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

410 ⚫ போதி மாதவன்

அந்நிலையில் ததாகதர், அவர்களுடைய பேச்சின் ஒலி கேட்டு, ஆனந்தரை அழைத்துச் சுபத்திரரை உள்ளே யனுப்புமாறு கூறினார். அவ்வாறே ஆனந்தர் சுபத்திரரிடம் சென்று, பெருமான் அவரை அனுமதித்துள்ளார் என்றும், அவர் உள்ளே செல்லலாம் என்றும் கூறினார்.

சுபத்திரர் பெருமானிடம் சென்று அவரை வணங்கினார். இருவரும் குசலம் விசாரித்துக் கொண்டபின், சுபத்திரர் அருகே ஓர் ஆசனத்தில் அமர்ந்து, சந்தேகங்களை ஐயனிடம் தெரிவித்தார். அக்காலத்தில் வெவ்வேறு சமயங்களில் ஆசாரியர்களாக இருந்து கொண்டு நாட்டிலே பிரசாரம் செய்து வந்த பூரண காசியபர், கோசலி மற்கலி, அஜிதகேச கம்பளர், கச்சாயனர், சஞ்சயர், நிகந்தநாதர் முதலியோர் தமது சொந்த ஞானத்தில் மெய்ப்பொருளைக் கண்டறிந்தவர்களா, அல்லது அவர்களிலே சிலர் மெய்ஞ்ஞானம் பெற வில்லையா என்று சுபத்திரர் வினவினார்.

பெருமான் அவருடைய வீண் விசாரத்தை உணர்ந்து கொண்டு, அந்த விஷயங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. என்று கூறியதுடன், தாம் அதுவரை போதித்து வந்த தருமத்தின் பெருமையையும் அவருக்கு விளக்கியுரைத்தார். சமய வாழ்க்கையில் உயர் நிலை அடைந்து, ஒழுக்கத்தில் நிலைபெற்று, தியானத்தின் மூலம் மெய்ஞ்ஞானம் பெற்று ஒவ்வொருவரும் உண்மையை உள்ளபடி உணர்ந்து கொள்வதற்குத் தாம் வகுத்துள்ள ‘அஷ்டாங்க மார்க்கம்’ என்ற முறை வேறு தரும நெறிகளில் இல்லையென்றும், பௌத்த தருமத்தில் பயிற்சி பெறும் சீடன் முதலில் ச்ரோத பன்னனாகி இரண்டாவதாக ஸக்ருதாகாமியாகி, மூன்றாவதாக அநாகாமியாகி, நான்காவதாக மிக உயர்ந்த அருகத்து நிலையை அடைவான் என்றும், அத்தகைய நான்கு