பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412 ⚫ போதி மாதவன்

பின்னர் பெருமான் பிக்குக்கள் பக்கம் திரும்பி, எவருக்காவது சந்தேகமிருந்தால் கேட்கும்படி கூறினார்:

‘புத்தரைப் பற்றியோ, தருமத்தைப் பற்றியோ, சங்கத்தைப் பற்றியோ, மார்க்கத்தைப் பற்றியோ யாராவது ஒரு பிக்குவின் மனத்தில், ஏதாவது மயக்கமோ, ஐயப்பாடோ இருக்கலாம். “பகவருடன் நேருக்கு நேராக நாம் இருந்த பொழுது நாம் அவரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்ளாமற் போனோமே!” என்று பின்னால் உங்களை நீங்களே குறை சொல்லிக்கொள்ள இடம் வைக்க வேண்டாம். ஆதலால் பிக்குக்களே, இப்பொழுதே கேளுங்கள், தாராளமாய்க் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!”

பிக்குக்கள் அனைவரும் மெளனமாகவே இருந்தனர். பெருமான் மும்முறை கேட்டும், அவர்களுடைய மெளனம் கலையவில்லை. கூட்டத்திலே புத்தர், தருமம், சங்கம் பற்றி யாருக்கும் எவ்வித ஐயமும் இல்லாதிருக்கலாம் என்று ஆனந்தர் பகவரிடம் கூறினார்.

அதைக் கேட்டும் பெருமான், நிறைந்த நம்பிக்கை காரணமாக ஆனந்தர் அவ்வாறு கூறியதாயும், உண்மையிலேயே அங்கிருந்த பிக்குக்களில் யாவருக்கும் எவ்வித ஐயமில்லை என்பதைத் தாமும் அறிந்ததாயும் கூறினார். அத்துடன் அங்கு குழுமியிருந்த ஐந்நூறு பிக்குக்களில், (கருத்துடைமையில்) மிகவும் பிற்பட்டு நிற்பவர்கள் உட்பட, யாவருமே திருந்திய வாழ்வு பெற்றவர்கள் என்றும், துக்கம் நிறைந்த பிறவிக் கடலில் இனிமேல் அவர்கள் விழ நேராது என்றும், யாவருக்கும் நிருவாணம் நிச்சயம் என்றும் அறிவித்தார்.

‘ஒ பிக்குக்களே! தருமத்தையும், சகல துக்கங்களின் காரணத்தையும், விமுக்திக்குரிய மார்க்கத்தையும் நீங்கள்