பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகா-பரி-நிருவாணம் ⚫ 413

இப்பொழுது அறிந்திருந்தால், அப்படியிருப்பினும், “நாங்கள் பகவரிடம் மரியாதையுள்ளவர்கள். பகவரிடம் கொண்ட மரியாதை காரணமாகவே நாங்கள் இவ்வாறு பேசுகிறோம்!” என்று தான் சொல்வீர்களா?’ என்று பெருமான் ஒரு கேள்வி கேட்டார்.

சீடர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ‘அவ்வாறில்லை’ என்று விடை பகர்ந்தனர்.

‘ஓ பிக்குக்களே! நீங்கள் பேசுவது, நீங்களே சுயமாக அறிந்து, நீங்களே கண்டு, நீங்களே அநுபவித்த விஷயமா யில்லையா?’ என்று அவர் கேட்க, ஆனந்தர் முதலிய யாவரும் ஆமென்று உரைத்தனர்.

மீண்டும் பகவர் பேச ஆரம்பித்தார்:

‘பிக்குக்களே, இப்பொழுது கவனியுங்கள்’

“(சேர்க்கையாகச்) சேர்ந்துள்ள பொருள்கள் யாவற்றிலும் (பிரிந்து) அழிவுறும் இயல்பு அடங்கி யுள்ளது” என்பதை நினைவுறுத்தியே நான் உங்களுக்கு உபதேசம் செய்கிறேன். உங்களுடைய விமோசனத்திற்காக இடைவிடாமல் கருத்தோடு உழையுங்கள்!”

இவையே ததாகதரின் கடைசி வார்த்தைகள் பிறகு ததாகதர் மௌனமாகித் தியானத்தில் ஆழ்ந்தார். நான்கு வகைத் தியானங்களையும் கடந்து, இறுதியான பேரின்ப நிலையாகிய நிருவாணத்தில் இலயித்து விட்டார்.

அந்த நேரத்தில் பூமி பயங்கரமாக அதிர்ந்தது. வானத்தில் இடியேறுகள் உறுமின. மன உணர்ச்சிகளை முழுவதும் அடக்கி வெற்றி பெறாத பிக்குக்கள் சிலர் கைகளை உயரே தூக்கிக் கொண்டு ‘ஓ’ வென்று கதறி