பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 ⚫ போதி மாதவன்

கொண்டு சென்றன. சித்தார்த்தன் கண் கொள்ளாத அந்த ஆனந்தக் காட்சியை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், திடீரென்று ஓர் அன்னப்புள், தன் சிறகெல்லாம் சிவப்பாகி, உடலிலிருந்து உதிரம் ஒழுக, அந்தப் பூம் பொழிலில் அவன் பக்கத்தில் வந்து விழுந்தது. அவன் பதறியெழுந்து, அதை எடுத்து, உதிரத்தைத் துடைத்து, அதன் உடலில் தைத்திருந்த அம்பு ஒன்றை மெதுவாக வெளியே எடுத்தான். அந்த அன்னத்தின் மீது குறி வைத்து யாரோ வெளியேயிருந்து அம்பு தொடுத்திருக்க வேண்டும்.

சித்தார்த்தன் வெளியே எடுத்த அம்பினைத் தன் கையிலே இலேசாகக் குத்திப் பார்த்தான்; கையில் வலியெடுத்தது. அவ்வளவு கூர்மையான கொடிய அம்பு மென்மையான அன்னத்தின் உடலை என்ன பாடு படுத்தி யிருக்கும் என்று அவன் எண்ணி, மனம் வருந்தி, அன்னத்தை மடிமீது வைத்துத் தட்டிக் கொடுத்து, அதன் புண்ணுக்குப் பச்சிலைகளை வைத்துக் கட்டினான்

அன்னத்தை எய்தவன் சித்தார்த்தனின் அம்மானான் சுப்பிரபுத்தரின் குமாரன் தேவதத்தன். அன்னம் சித்தார்த் தன் இருந்த தோட்டத்தில் விழவே, அவன் அதைத் தன்னிடம் தரவேண்டுமென்று கேட்டு ஒரு வேலைக்காரனைச் சித்தார்த்தனிடம் அனுப்பினான்.

சித்தார்த்தன் அன்னம் தன்னுடையதாகிவிட்டது என்று வேலைக்காரனிடம் சொல்லியனுப்பினான். பின்னர் தேவதத்தனே நேரிற் சென்று கேட்டான். அம்பு விடுத்த தில் அன்னம் இறந்திருந்தால், அது எய்தவனின் உடைமை யாகலாம். ஆனால் அது உயிருடன் இருந்ததாலும், தன்னிடம் வந்து விழுந்ததாலும், அதன் உயிரைக் காப்பாற்றிய தனக்கே அது சொந்தம் என்று சித்தார்த்தன் கூறினான்.