பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

புத்தர் பெருமானின் சரிதையை விரிவாக எழுத வேண்டுமென்று பல்லாண்டுகளாக எனக்கு ஆவல் இருந்து வந்தது. 1951-ஆம் ஆண்டு, ஒரு சமயம் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்களிடம் என் ஆவலைத் தெரிவித்தேன். உடனேயே அவர்கள் மகிழ்ச்சியுடன் துள்ளி அமர்ந்துகொண்டு, ‘அவசியம் எழுதுங்கள், சீக்கிரம் எழுதி முடியுங்கள்! எனது “ஆசிய ஜோதி” யிலுள்ள பாடல்களில் தேவையானவைகளை எடுத்து உபயோகித்துக் கொள்ளுங்கள்!’ என்று ஆர்வத்தோடு ஆசி கூறினார்கள். ஆசிய ஜோதியாய்-அகில ஜோதியாய்-விளங்கிய போதி மாதவனிடம் கவிமணியவர்கள் கொண்டிருந்த ஈடுபாடு எனக்கும் ஊக்கமளித்தது. அரசு நிழலிருந்து அருளறம் பூண்ட அண்ணலின் சரிதையையும், அவரது தருமத்தையும் பற்றி எழுதுவதற்குத் தகுதியும் ஆற்றலும் இல்லாதிருப்பினும் எழுத முற்பட்டேன். அதன் விளைவாக ஆறு நூல்கள் உருவாயின.

பெருமானைப்பற்றிய சரித்திர ஆதாரங்கள் குறைவு: கற்பனைக் கதைகளே அதிகம்; பெளத்தத் திருமுறைகளிலிருந்து சில குறிப்பிட்ட சரித்திர ஆதாரங்களே கிடைக்கின்றன. அவைகளில் புத்தர் தமது சுயசரிதையைத் தாமே கூறியுள்ள பகுதிகள் மேலும் சுருக்கமானவை.