பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 ⚫ போதி மாதவன்

அவர் காதுகளுக்கும், கண்களுக்கும், கருத்துக்கும் மாறி மாறி விருந்தளிப்பதையே தொழிலாய்க் ெெரண்டிருந்தனர் அவரைச் சூழ்ந்திருந்த அணங்குகள் அனைவரும்.

நாடு, மக்கள் இனங்கள், உழைப்பு, தொழில்கள், வாழ்வு, வாழ்க்கைப் போராட்டம், வனங்கள், விலங்குகள் முதலிய எதையும் இளவரசர் நேரில் பார்த்தறிய வழியில்லை. இரவு நேரத்தில் அயர்ந்து - துயிலும்போது கனவிலே மட்டும் அவர் பல காட்சிகளைக் காண்பது வழக்கம், அக்காட்சிகளின் முடிவில், ‘அருமை உலகே! அறிந்தேன், அறிந்தேன்! இதோ வந்தேன்!’ என்று அவர் முணு முணுப்பார். இச் சொற்களைக் கேட்டுத் திடுக்கிட்டு விழிக்கும் யசோ தரை அவரை எழுப்பி என்ன நேர்ந்தது என்று கவலையுடன் கேட்பாள். ஏக்க மும் சோகமும் தேங்கிய முகத்துடன் சித்தார்த்தர் அவள் துயரத்தை மாற்றுவதற்காக, ‘ஒன்றுமில்லை!’ என்று வலிந்து புன்னகை புரிவார்.

தேவகீதம்

ஓரு நாள் இரவில் அந்தப்புரத்தில் அமர்ந்திருந்த போது தேன்பிலிற்றுவது போல் தேவகீதம் ஒன்று அவர் செவிகளில் கேட்டது. வாடி நொசிந்த சுடர்க் கொடிகளைப் போலப் பெண்கள் அனைவரும் அயர்ந்து துயிலும் நேரத்தில், வெளியேயிருந்து வீசிய பூங்காற்றில் இசை கலந்து வந்து ஒலித்துக்கொண்டிருந்தது. காற்றைப் போன்றது ககன வாழ்க்கை என்றும், எவ்வளவு தான் உறுதியாய்ப் பற்றியிருப்பினும், இந்த வாழ்வு முடிவில் உளுத்துப்போகும் என்றும், ‘நாம் எங்கிருந்து வந்தோம், எதற்காக வந்தோம், எங்கு செல்கிறோம். எதற்காகச் செல்கின்றோம்?” என்ற செய்திகளை அறியாமல் மன்பதையெல்லாம் மயங்கி நிற்கின்றது என்றும், மா நிலத்தின் துயரையெல்லாம் மாற்ற வந்துள்ள ஞானக்