பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று காட்சிகள் ⚫ 55

கதிரான சித்தார்த்தர் மேற்கொண்டு காலங்கடத்தாமல் துயில் நீங்கித் துள்ளியெழுந்து வர வேண்டும் என்றும், அந்தத் தேவகீதம் மெல்லிய இசையுடன் முழங்கிக் கொண்டிருந்தது.


‘நித்திய ஆனந்தத்தை-அரசே,
நீயும் அடைவதுண்டோ ?
சித்தத் தெளிவுடையாய் - சிறிது
சிந்தனை செய்திடுவாய்!

சாலவே உலகம்- துயரால்
தளர்ந்து வாடுதையா!
மாலை மாலையாய்க்- கண்ணீர்
வடிய விடுதையா!

“என்று வந்திடுவான்- ரக்ஷகன்
எவ்விடம் தோன்றிடுவான்?”
என்றிப் புவியெல்லாம் - நோக்கி
எதிரே நிற்குதையா!

‘கண்ணிலா உலகம் - இடறிக்
கவழ்ந்து விழாமல்,
அண்ண லே, எழுந்து - விரைவில்
அருள வேண்டுகின்றோம்!”[1]

தேவகீதத்தைக் கேட்டது முதல் சித்தார்த்தருக்கு நிலை கொள்ளவில்லை. இத்துடன் பணிப் பெண் ஒருத்தி கூறிய கதைகளால் அவருக்கு நாடு நகரங்களையும், பலப்பட்ட மக்களையும், வீதிகளையும், சோலைகளையம் கண்டு வரவேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. முதலில் தமது தலை நகரத்தையும், அதற்கு அணித்தே யிருந்த சோலையையும் பார்க்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார். குளிர்ந்த ஏரிகளும் குளங்களும், கொத்துக் கொத்தாக மலர்களுடன் விளங்கும் செடிகளும்


  1. ‘ஆசிய ஜோதி.’