பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

இந்த அரிய நிகழ்ச்சியும், மகாநாட்டுச் சொற்பொழிவுகளும் இந்நாட்டு மக்களுக்குப் பௌத்த தருமத்தின் பண்டைப் பெருமைகளைப் படம் பிடித்துக் காட்டியிருக்கும். ‘கண் பிறர்க்களிக்கும் கண்ணோன்’ என்று துதிக்கப்பெற்ற புத்தர் எண்பது ஆண்டுகள் இனிது வாழ்ந்து, இந்நாட்டில் காடும் கிராமமும், நாடும் நகரும் சுற்றிவந்து, மக்களிடம் அருள் சுரந்து தரும உபதேசம் செய்து, அற ஆழியை உருட்டிவந்த செய்தி கற்றோர் யாவருக்கும் நினைவுக்கு வந்திருக்கும். பௌத்த தருமம் பற்பல நூற்றாண்டுகளாக நாடெங்கும் பரவித் தழைத்து வளர்ந்து வந்தமை இப்பொழுது பழங் கதையாய்ப் போய்விட்டது. தூர தொலைவிலுள்ள ஆசிய நாடுகள் பலவற்றிலேயே பௌத்தம் பல்கி வளர்ந்து வருகிறது. பிறந்த நாட்டிலே, கிழக்குப் பாகிஸ்தான் மூலையிலேதான் அதைத் தேடிக் காணவேண்டியிருக்கிறது! ஆயினும் பௌத்த தருமத்தின் உயரிய கொள்கைகள் பலவும் இங்குள்ள பிறசமயங்களிலே ஊறிக் கலந்துள்ளன. பெரும்பாலான அறிவாளர்கள், தாங்கள் பௌத்தர்களாயில்லாதிருப்பினும், அதனிடத்திலும், புத்தரிடத்திலும் அன்பு கொண்டுள்ளனர்.

புத்தரைப் பகவான் என்று பக்தர்கள் பக்தியால் பரவுவார்கள். அவர் நம்மைப் போன்ற மனிதரே; அரண்மனையிலே பிறந்து, அரச போகங்களைத் துய்த்தவர்; ஆனால், அரியாசனத்தைத் துறந்து வெளியேறிய பின்பு, காடு தான் அவருக்கு வீடு; கையிலிருந்த ஓடு தான் வற்றாத செல்வம். அந்நிலையில் இராஜகிருக நகரில் ஒருநாள் முதன் முதல் பிச்சையெடுத்தார். திருவோட்டில் சேர்ந்த உணவுடன் அவர் ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறத்திற்குப்போய் உணவருந்த அமர்ந்தார். ஓட்டிலிருந்து ஒரு கவளம் எடுத்து வாயில் போடுகிறார், வாய் குமட்டுகிறது! அறுசுவை உண்டி எங்கே! கண்டவர் வீடுகளில் வாங்கிய கதம்பச் சோறு எங்கே! உணவு உள்ளே செல்ல மறுத்தது.