பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர் நீங்கு படலம் ⚫ 83

கலாப மயில்களைப் போல் ஆடிக்கொண்டிருந்தவர்களும், பட்ட மரம் தளிர்க்கு படி பாடிக் கொண்டிருந்தவர்களும் யாவர்களும் அவரவர் இருந்த இடங்களிலேயே அயர்ந்து படுத்துவிட்டார்கள். எல்லோரையும் உறக்கம் பற்றிக் கொண்டு விட்டது. துயில்கொண்ட தோகையர்களைச் சித்தார்த்தர் ஏறிட்டுப் பார்த்தார்.

அழகே உருக்கொண்டு விளங்கிய அணங்குகள் அலங்கோலமான பல நிலைகளில் சிதறிக் கிடந்தார்கள். கருமேகம் போன்ற கரிய கூந்தல்கள் தரைமீது அலையலையாகப் புரண்டு கொண்டிருந்தன. வாடி நொசிந்த கொடிகளைப்போல உடல்கள் நுடங்கிக் கிடந்தன. மீன்களைப் போல மிளிர்ந்து கொண்டிருந்த கருநீலக் கண்கள் முகிழ்த் திருந்தன. சிறிது நேரத்திற்கு முன்ன ல், வானத்திலே யுள்ள வானவில் போல், பல வண்ணங்களோடு சுடர் விட்டு உலவிக்கொண்டிருந்த அந்த உயிரோவியங்கள் அப்போது உயிரடங்கி ஒடுங்கிக் கிடந்தன. அம்மங்கையர் மூச்சு வாங்கும்போது பொங்கியெழுந்த மார்புகளையும், கனவுகளால் அவர் முகங்களில் தோன்றும் குறிகளையும் ஆங்கே தொங்கிக்கொண்டிருந்த பொன் விளக்குகளின் ஒளி எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.

ஒருத்தி புல்லாங்குழலைப் பற்றிய கையுடன், மார்பை மறைத்துக் கொண்டிருந்த வெண் துகில் அகன்றதை அறியாமலே உறங்கிக்கொண்டிருந்தாள். ஒருத்தி மத்தளத்தைக் காதலனைப் போல் இரு கைகளாலும் அணைத்த வண்ணம் துயின்று கொண்டிருந்தாள். பாடிக்கொண்டிருந்த ஒரு பாவையின் கை இன்னும் வீணைத் தந்திகளிலே மாட்டிக் கொண்டிருந்தது. சாளரத்தருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண், அதைப் பிடித்தவண்ணம், வில்லைப்போல் வளைந்து, கவிழ்ந்த தலையுடன் மெய்மறந்திருந்தாள்; அவள் பெண்ணா, சலவைக் கற்சிலையா என்று தெரியாமலிருந்தது. மானுக்கு உணவளித்துக் கொண்டிருந்த ஒரு மாதரசி அப்படியே