பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 ⚫ போதி மாதவன்

சாய்ந்து உறங்குகையில், மானும் அவள் மார்பில் தலை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தது. ஒருத்தி தன் பொற் சங்கிலிகளும், நகைகளும், உடைகளும் சுழன்று வீழ்ந்த நிலையில், யானையால் மிதிக்கப்பட்டவள் போலத் துவண்டு கொண்டிருந்தாள். எவ்வளவோ நாணத்தோடு விளங்கி வந்த நாகரிக நங்கையர் பலர் அப்போது பலமாகக் குறட்டை விட்டுக் கொண்டு, கைகளையும் கால் களையும் தாறுமாறாகப் பரப்பிக் கொண்டு, நெடுந் துயிலில் ஆழ்ந்திருந்தனர். முத்துக்கள் பதித்த செம்பவளச் செப்புக்களைப் போன்று சில பெண்களின் வாய்கள் பிளந்திருந்தன; சிலருடைய வாய்களிலிருந்து உமிழ்நீர் வழிந்து கொண்டிருந்தது. பூத்தொடுத்துக் கொண்டிருந்த பாவையர் சிலர் தங்கள் மீதும், அருகேயிருந்த தோழியர் மீதும் அம்மாலைகளைப் போட்டுக் கொண்டு உறங்கினர். மொத்தத்தில் உறக்கத்தால் ஒசிந்து வீழ்ந்திருந்த அந்தப் பெண்கள் மதயானை அழித்தெறிந்த மலர்க் கொம்புகள், கொடிகளைப் போலவும், புயலால் தாக்குண்ட பூத்தடங்கள் போலவும் காணப்பட்டனர். இடையிடையே சிலருடைய கால்களின் அசைவினால் சிலம்பொலி கேட்டது. சிலர் இன்பக் கனவுகள் கண்டு நகைத்தனர்; சிலர் தீய கனவுகள் கண்டு புலம்பினர். இவைகளையெல்லாம் கண்டும் கேட்டும் சித்தார்த்தர் தமக்குள்ளே சிந்தனை செய்து கொண்டிருந்தார்.

‘பாவம்! பசும் பொன்னால் செய்த உயிர்ப் பாவைகள் போல் விளங்கிய இப் பெண்கள், உறக்கம் வந்து கண்களை மூடியவுடன், எவ்வளவு அலங்கோலமாகக் காட்சியளிக்கிறார்கள்! அழகிய ஆடைகளிலும், அணியிழைகளிலும் மயங்கி நிற்கும் ஆடவர்கள் இப்போது இவர்களின் எழிலைப் பார்த்தால், உண்மை நிலையை உணர்ந்து கொள்வார்கள்!’ என்று அவருக்குத் தோன்றிற்று.

ஆவர் அமர்ந்திருந்த இசை மண்டபத்தின் அருகே மண வறையில் தேவி யசோதரை மலரணைமீது துயின்று