பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-12-


கட்குப் பிறக்கும்போதே குருதியோடு கலந்திருந்தது. இதற்குச் சான்றாக, திருவள்ளுவனாரின் கனல் கக்கும் கருத்துக்கள் சில ஈண்டு வருமாறு:-

வீரம் விளை நாடு

அன்று நம் நாட்டு மறவர்கள், எதிரியின் படைக் கலம் தம்மை நோக்கி வந்தபோது, திறந்திருக்கும் கண்களை ஒருமுறை இமைத்துவிட்டாலும் அந்நிலையை எதிரிக்குப் புறமுதுகு காட்டி ஓடிவிட்டதாகவே கருதினார்களாம். எத்துணை மற:உணர்வு! இதனை,

"விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு"

என்னும் குறளால் அறியலாம். மற்றும், போரில் விழுப் புண்படாத நாட்களையெல்லாம் தாங்கள் உயிர் வாழாத நாட்களாகக் கருதுவார்களாம்: அதாவது, புண்படாத நாட்களையெல்லாம் கழித்துவிட்டு, புண்பட்ட நாட்களை மட்டும் எண்ணிக் கணக்கிட்டு ஆண்டாக்கி, அத்தனை ஆண்டுகள் மட்டுமே அவர்கள் உயிர் வாழ்ந்ததாகக் கருதவேண்டுமாம். இவ் வியத்தகு கருத்தினை,

"விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை யெடுத்து."

என்னும் திருக்குறளால் தெளியலாம். இவ்வளவு வீரம் விளைந்திருந்த இந்நாட்டில் அவ்வீரம் எங்கே போயிற்றோ?

எனவேதான். இந்திய நாட்டு மக்கள் தம் பழைய வீர வரலாற்றினை மீண்டும் புரட்டிப் பார்க்கவேண்டும். தம் பழம் பெரு வீர மரபினை இப்போது மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நம் நாட்டுப் புலவர் பெருமக்கள் முழங்கிச் சென்றுள்ள மறவுரைகளும் படை முறைகளும் இன்றைய படைப் பயிற்சிக் கல்லூரிகளில்