பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-14-


முன்னோடிச் செயலாக ஒவ்வொரு குடும்பத்தாரும் ஒன்று செய்யலாமே! அதாவது, குடும்பத்திற்கு ஒரு பிள்ளை வீதமாவது கட்டாயமாகப் பட்டாளத்திற்கு அனுப்பி வைக்கலாமே! சிற்சில குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளுக்குள் ஒரு பிள்ளையைப் பொறியியல் வல்லுநராக (Engineer) ஆக்குகின்றனர்; மற்றொரு பிள்ளையை மருத்துவராகச் (Doctor) செய்கின்றனர்; இன்னொரு பிள்ளையைப் பேராசிரியர் (Professor) தொழிலுக்குத் திருப்புகின்றனர். வேறொரு பிள்ளையை வழக்கறிஞர் (Advocate) வேலைக்கு அனுப்புகின்றனர். மேலும் ஒரு பிள்ளையை வாணிகஞ் செய்யவிடுகின்றனர். ஆனால் இன்னோர் எவரும் ஒரு பிள்ளையையாயினும் உளமாரப் பட்டாளத்திற்கு அனுப்பி வைப்பதில்லை. சிலரோ, முதல் பிள்ளையையும் மருத்துவக் கல்லூரியில் சேர்த்தாய்விட்டது; இரண்டாவது மகனையும் மருத்துவக் கல்லூரியில் சேர்த்தாய்விட்டது; அவ்வளவோடு அமையாமல் மூன்றாம் மைந்தனையும் அங்கேயே சேர்க்க முயலுகின்றனர். பொறியியற் கல்லூரியிலும் மருத்துவக் கல்லூரியிலுமே தம் மைந்தர்களைச் சேர்க்க அடித்துப் பிடித்துப் போட்டி போடுபவர்கள் ஒரு பிள்ளையையாவது படைப் பயிற்சிக் கல்லூரியில் ஏன் சேர்க்கக்கூடாது? காணம் என்றால் வாயைத் திறப்பது - கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்வதா? ஊதியங் கொழிக்கும் வேலையென்றால் உறுதியாகப் பற்றிக் கொள்வது-உயிர் கொடுக்கும் பணியென்றால் ஒடியொளிவதா ?

தங்களை மிக மிக மேலானவர்களாகக் கருதிக்கொண்டிருக்கும் பெருஞ் செல்வர்கள், பெரிய படிப்பாளிகள், பெரும் பெரும் பட்டம் பதவிகள் உடையவர்கள் ஆகியோர் தத்தம் பிள்ளைகளுள் ஒருவரையாவது பட்டாளத்தில் பணிபுரிய ஏன் அனுப்பக்கூடாது? உயிர் என்ன வெல்லக் கட்டியா? அமெரிக்க நாட்டின் தலைவராய்த் திகழ்ந்த கென்னடி ஒரு பெருஞ் செல்வரின் மகனாவார்;