பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-15-


அவர் படையில் சேர்ந்து பணி புரியவில்லையா? இங்கிலாந்து நாட்டின் தலைமையமைச்சராய் விளங்கிய சர்ச்சிலின் மகன் பட்டாளத்தில் சேர்ந்து தொண்டாற்ற வில்லையா? ருசிய நாட்டின் மாபெருந் தலைவராய் விளங்கிய ஸ்டாலின் மகன் போர்க்களத்தில் உயிர் துறக்கவில்லையா?

உயர்குலம்

'இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்'. என்றார் ஒளவைப் பிராட்டியார். அதாவது கொடுப்பவர் உயர் குலத்தவராம்; கொடாதவர் இழிகுலத்தவராம். உண்மைதான்! கொடுப்பவருள்ளும் எதைக் கொடுப்பவர் மிக மிக உயர்ந்தவராவர்? ஒருவர் தம் உடைமைகளுள் எதையிழந்தாலும் வாழ முடியும்; ஆனால் உயிர் போய்விடின் ஒன்றுஞ் செய்யவியலாது. எனவே, ஒருவரின் உடைமைகளுள் உயிரே சிறந்ததாம். அதனால் தான். ஒழுக்கத்தின் உயர்வை உரைக்க வந்த வள்ளுவனார் உயர் பொருளாம் உயிரை எல்லையாக வைத்து 'ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்' என்றார். எனவே, கொடுப்பவர் கட்குள்ளும், நாட்டின் நலனுக்காகப் போர்க்களத்தில் உயிரைக் கொடுக்கும் குடும்பத்தாரே மிக மிக உயர்ந்த குலத்தவராக மதிக்கப் பெறுவர். இதனை இந்திய மக்கள் இன்று உணர்ந்து அதற்கேற்பச் செயலாற்ற வேண்டும்.

வெள்ளம் வருமுன்

அங்ஙனமெனில், ஈவு இரக்கமற்ற போர்த் தொழிலாகிய கொலைச் செயலில் எல்லாரும் இறங்கிவிட வேண்டியதுதானா? என்ற கேள்வி யெழலாம். நாமாக வம்புச் சண்டைக்கு வலியப் போய் யாரையும் கொல்லவேண்டா! தானாக வலிய வரும் வலுச் சண்டையையும் தடுத்து நிறுத்திப் பார்ப்போம். மேலும் மீறி வருமாயின் போர் அரங்கத்தில் குதித்துவிட வேண்டியதுதானே! அதற்கு