பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

-6-


எனவே, ஒருவன் போரில்லா நேரத்தில்-போர்க்களம் அல்லாத வேறிடத்தில் இறந்துபோயினும், அவனைப் போர்க்களத்தில் இறந்தவனாகவே கருதி, உண்மையாகவே போர்க்களத்தில் இறந்துபோன மறவனது தகுதியை அவனுக்கும் அளித்துக் கல்லெடுத்து வழிபடுவது அன்றே வழக்கமாகிவிட்டது. அது இன்றும் போகவில்லை; இனியும் என்றும் போகாது போலும்! அதாவது, இந்தக் காலத்திலும்கூட இறந்துபோனவர்கட்கு நடத்தும் இறுதி நிகழ்ச்சியைக் 'கருமாதி-கல்லெடுப்பு' என்னும் பெயரால் மக்கள் குறிப்பிடுவது இயல்பு. பெயருக்கு ஏற்பவே இறுதி நிகழ்ச்சி நடக்கும். இடத்தில் ஒப்புக்குக் கல் வைத்துக் கடமையாற்றுவது வழக்கம்.

எனவே, இந்தக் காலத்திலும், இறந்து போன ஒருவர்க்குச் செய்யும் இறுதி நிகழ்ச்சியில் கல்லெடுத்து வழிபாடாற்றுவதிலுள்ள உட்கருத்து யாது? இவரும், போர்க்களத்தில் புகழ்ச் செயல்கள் பல புரிந்து புண்பட்டு இறந்து போனார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்பொருள்.

உண்மையிதுவாயின், நாற்பத்தைந்து கோடி இந்திய மக்களும் போர் மறவர்களாக ஏன் மாறக் கூடாது? விரையொன்று போட்டால் சுரையொன்று முளைப்பதா? புலிக்குப் பிறந்தது பூனையாவதா? நம் முன்னோர்களின் போரூக்கம் நமக்கு எங்கே போயிற்று?

மகளிர் மறம்

உருண்டு திரண்ட முழவுத் தோட்களும் பரந்தகன்ற திண்ணிய மார்பும் உடைய ஆடவர்களேயன்றி, மெல்லியற் பெண்டிருங்கூட, பச்சிளஞ்சிறார்களுங்கூட அன்று போர் முயற்சியில் பெரும் பங்கு கொண்டதாக நம் இலக்கிய வரலாற்றேடுகள் இயம்புகின்றனவே! அவர் வழிவந்த நாம் மட்டும் கோழையர்களா? அல்லது பேதையர்களா? இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே நம்