பக்கம்:பௌத்த தருமம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிப்படைக் கொள்கைகள்

111


எப்படிப் போதனை செய்ய முடியும் என்பதே நமக்கு விளங்கவில்லை!’ என்று ‘கேன உபநிடதம்’ வருணிக்கும் ஆன்மாவைப் பற்றிப் புத்தர் பெருமான் ‘அது இல்லை’ என்றே சொல்லியிருப்பாரா என்று சந்தேகம் தோன்றுவது இயல்பே. அவர் காலத்திலேயே சிலர் சந்தேகப்பட்டு அவரிடம் கேள்விகளும் கேட்டிருக்கின்றனர்

பரம்பொருள்

இதைப்பற்றி மேலும் ஆராயப் புகுமுன் பரம் பொருளைப் பற்றியும் புத்தருடைய கருத்து என்ன என்பதைத் தெரித்துகொள்வது நலம்.

புத்தர் பரம்பொருளைத் தமது தருமத்திற்கு ஆதாரமாகக் கொண்டு உபதேசிக்கவில்லை. பெளத்த நூல்களில் இறை வணக்கம் கூறப்பெறவில்லை. உலகில் பல நாடுகளிலும் வசித்துவரும் பெளத்தர்க ளிடையிலும் இறைவணக்கம் இல்லை. இறைவனே இல்லாத ஒரு சமயமா பெளத்தம் என்றால், அப்படித் தான் அது இருக்கின்றது.

‘எண்ணிலடங்காத எத்தனையோ விகாரமான தெய்வங்களை வணங்கிவந்த இந்தியாவில் பெளத்தம் அவைகளை விட்டுத் தாண்டிச் சென்றது’ என்று உலக சரித்திர ஆசிரியரான அறிஞர் வெல்ஸ் குறித்துள்ளார். ‘அவைகளை விட்டுத் தாண்டிச் சென்றது’ -(it passed them by)’– என்ற சொற்றொடர் உண்மையையே குறிக்கின்றது. ஏனெனில் பெளத்த தருமம் அந்தத் தெய்வங்களின் உண்மையைப் பற்றியோ இன்மையைப் பற்றியோ வாதாடிக் கொண்டிருக்க வில்லை, அது தன் வழியே போய்க் கொண்டேயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/116&oldid=1386869" இலிருந்து மீள்விக்கப்பட்டது