பக்கம்:பௌத்த தருமம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

பெளத்த தருமம்



புத்தருடைய உபதேசத்திற்கு முதல் ஆதாரம் தத்துவமோ, கொள்கையோ அன்று, பிரத்தியட்ச உண்மையே யாகும். துக்கம் கண் முன்பு காணப் பெறுவது. அதை அடிநிலமாக வைத்துக்கொண்டே, அதை நீக்கும் வழியை அவர் உணர்த்தினார். அநுமானமாக அவர் எதையும் கொள்ளவில்லை.

தெய்வத்தின் அருளாலோ, வேறு தேவதைகளின் ஆற்றலாலோ, மனிதன் துக்கம் தீர்ந்து நன்மையடைய முடியும் என்று நம்பிக்கொண்டிருந்தால், அவன் சொந்த முயற்சி எதுவும் செய்ய இடமிராது. இதற்கு நேர் மாறாகப் புத்தர், அவன் தானே முயற்சி செய்ய வேண்டும் என்றும், தனக்குத் தானே அடைக்கலம் என்றும், அடைக்கலம் வெளியே எங்குமில்லை என்றும் உபதேசித்தார். அந்த உபதேசத்தால் அவன் தன் முயற்சியாலேயே முழு மலர்ச்சியடைவதற்கு எத்தகைய வாய்ப்பு ஏற்படுத்தப்பெற்றது! ஞானமின்றேல் தியான மில்லை ; தியான மின்றேல் ஞானமில்லை; இரண்டும் சேர்ந்தே அமைய வேண்டும் என்று அவர் கூறியதால் மனிதன் தன் மலங்களை நீக்கிக் கொண்டு விடுதலையை நெருங்கிச் செல்ல முடிந்தது. அந்த விடுதலையும், பயிற்சியாளனுடைய பரிபாகத்திற்குத் தக்கபடி, இப்பிறவியிலேயே, இங்கேயே, இப்போதே பெற முடியும் என்று அவர் காட்டியதைப் பார்க்கினும் நன்னம்பிக்கை அளிக்க வேறு என்ன செய்ய முடியும்?

முன்னோர் உரைத்த அரிய பெரிய விஷயங்களை யெல்லாம் ஆராய்ந்து, புத்தர் பெருமான், தமது மார்க்கத்திற்குரிய கருத்துக்களையும், சொற்களையும், சொற்றொடர்களையும். உபதேசக் கதைகளையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/121&oldid=1386891" இலிருந்து மீள்விக்கப்பட்டது