பக்கம்:பௌத்த தருமம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

பெளத்த தருமம்



பௌத்த தருமத்தின் முதல் சிறப்பு அதன் தெளிவு. எவ்வளவுக் கெவ்வளவு தெளிவாயிருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது ஆழமும் உள்ளது. அதற்கு ஆதாரம் அல்லது அத்தாட்சி அதுவேதான். அதன் வாசகங்களை அறிந்தவுடன் மக்கள் மனம் அவற்றை நம்பும்படி ஏற்படுவதன் காரணம், அவர்கள் உள்ளங்களிலே மறைவாக இருக்கும் ஒழுக்க முறைமையையே அதிலும் காண்கிறார்கள் என்பதே. அதன் விதிகள் யாவும் ஒவ்வொருவரும் தம்மைத் தாமே அடக்கி வெற்றி கொள்வதற்காக அமைந்தவை. தம்மை அடக்கிக் கொள்ளல் எளிதன்று; ஆனால் அடக்கிக் கொள்ளா விடில், துராசைகளை நீக்கி, முடிவில் அப்பாவை வேரறுக்க முடியாது. தியானத்தின் முடிவில் மெய்யறிவு பூரணமாகின்றது. அந்நிலையில் விஷேச ஆற்றல்களும் அமைகின்றன. சாதாரணப் புலவர்களாலும், மனத்தாலும் அறிவதைப் பார்க்கிலும், நுணுக்கமான விசேஷப் பார்வை ஏற்படுகின்றது. அதிலிருந்து துக்க நீக்க வழியும் தெரிகின்றது.

இத்தகைய உபதேசத்திற்கு ஆதாரமாகவே புத்தர் இந்த இயலில் விளக்கியுள்ள அநித்தம், துக்கம், அநான்மம் என்ற அடிப்படைக் கொள்கைகளை அமைத்துக் கொண்டார். உடலுள் அமைந்துள்ளதாகக் கூறப்படும் தனித்தனியான ஆன்மாவைக் குறித்து, அது இல்லை என்று புத்தர் கூறியதை ஒப்புக் கொள்ளுதல் எளிது. ஆனால் பொதுவாக மனிதருள் இலங்கும் ஆன்மாவும், பிரகிருதி அனைத்திலும் இலங்கும் ஆன்மாவும் ஒன்றேயென்று வேதாந்திகள் கூறுவது போன்ற கருத்தை அவர் எதிர்க்கவில்லை என்றும் சில அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/125&oldid=1386890" இலிருந்து மீள்விக்கப்பட்டது