பக்கம்:பௌத்த தருமம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

பெளத்த தருமம்



சொல்லி விளங்கவைக்கின்றன. ஒரு மனிதனுடைய வினைப் பயன்கள், அடுத்த பிறப்பில் எப்படி வந்து சேருகின்றன என்பதை இவைகள் கூறுகின்றன. இவைகளைப் பார்க்கும் பொழுது முந்திய மனிதன் தானா அடுத்த பிறப்பில் தோன்றுகிறான் என்று சந்தேகம் ஏற்படும். இதற்கு 'ஆம், இல்லை' என்ற இரண்டு பதில்களும் பொருந்தும், அடுத்த பிறப்பில் தோன்றுபவன் முந்திய மனிதன் அல்லன்; ஆயினும் அவன் வேறொருவனும் அல்லன். அதாவது முந்திய மனிதனைக் காரணமாகக் கொண்டு, அவனுடைய கரும வினைகளின் பயனாக எழுந்தவனே பிந்தியவன், முந்தியவன் இல்லாதிருந்தால், இவனும் தோன்றியிருக்க மாட்டான்.

ஆசிரியன் சீடனுக்குப் போதித்தல், கண்ணாடியின் பிரதிபிம்பத்தைப் பார்த்தல், தீபச் சுடரிலிருந்து வேறு சுடரை ஏற்றுதல் ஆகியவைகளை நாம் நேரே பார்த்து உண்மையை உணர்ந்து கொள்ள முடிகின்றது. ஆனால் கரும வினையின் பயன்கள் ஒரு பிறப்பிலிருந்து மறு பிறப்புக்கு எப்படி வந்து சேருகின்றன என்பது பற்றி முழுதும் விளக்கமாகத் தெரியவில்லை என்று சில பௌத்தர்களே கருதுகின்றனர் என்றும், அந்த முறையில் விளக்கப் பெறாத மறைவான விஷயம் ஏதோ இருப்பதாக அவர்கள் எண்ணுகின்றனர் என்றும் பேராசிரியர் இலட்சுமி நரசு குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த தருமம் கூறும் கரும நியதி வையகத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகள், குண வேற்றுமைகள், (புலி மானைத் தின்பது போன்ற) கொடுமைகள், பிறப்பிலேயே பிணிகளுடன் தோன்றல் முதலியவைகளுக்கு விளக்கம் கண்டுபிடிக்க ஆதாரமாயுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/137&oldid=1386917" இலிருந்து மீள்விக்கப்பட்டது