பக்கம்:பௌத்த தருமம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

பெளத்த தருமம்



யிருந்தன என்பதும், அவைகளால் தீமைகள் பெருகி வந்தன என்பதும் புத்தர் உபதேசங்களி லிருந்தே தெரிகின்றன. முதலில் பிராமணர், இராஜந்யர் (க்ஷத்திரியர்) என்ற இரு பிரிவுகளே இருந்தன; பின்னாலேயே நான்கு வருணங்களாகவும், வேறு கிளைகளாகவும் வளர்ந்தன. மனிதனைப் பிராமணனாக்குவதும், அல்லாதவனாக்குவதும் அவனுடைய ஒழுக்கந்தான் என்பதையும், ஒழுக்கத்தைக் கைவிட்டுவிட்டு, 'இந்திரனே வா, சந்திரனே காப்பாற்று' என்பவை போன்ற பிரார்த்தனைகள் செய்வது வீணாகும் என்றும் புத்தர் கூறிவந்தார். மேலும் அக்காலத்துப் பிராமனர் பலர், செய்யத்தகாத, விலக்கப் பெற்ற தொழில்கள் பலவற்றைச் செய்துவந்ததையும் அவர் எடுத்துக் காட்டிப் பரிகசித்துவந்தார். அவர்கள் பிருமத்தைத் தாமே நேரில் கண்டதுபோலப் பேசிவந்ததையும், சொந்த ஆராய்ச்சியில்லாமல், கிளிப்பிள்ளைகள் போல் பழைய சாத்திர வாசகங்களையே கூறி வந்ததையும் அவர் அவர்கள் முன்பாகவே கண்டித்துப் பேசிவந்தார். சாதிப் பிரிவினையோடு, ஜோசியம், மாந்திரிகம், புரோகிதம் முதலியவைகளையும், மூடநம்பிக்கைகளையும் அவா ஆணித் தரமாகக் கண்டித்து வந்தார்.

புத்தருடைய உபதேசங்களாலும், பௌத்த தரும வளர்ச்சியாலும், சாதிப் பாகுபாடுகள் மிகவும் தளர்ந்து உலைந்து போய்விட்டன. அமைதியாகவும் ஆழ்ந்த முறையிலும், அவரும் அவருடைய அடியார்களும் செய்துவந்த பிரசாரத்தினால், சாதிகளின் அடிப்படைகளே ஆடிப்போயிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/157&oldid=1386807" இலிருந்து மீள்விக்கப்பட்டது