பக்கம்:பௌத்த தருமம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

பெளத்த தருமம்



சந்தேகங்களுக்கு விளக்கம் கூறவேண்டும்; மயக்கம் ஏற்படும்போது அறிவுச் சுடரைத் தூண்டித் தெளிவிக்க வேண்டும். இந்த உதவிகளைப் பல்லாண்டுகள் பிக்குகளாக விளங்கிப் பயிற்சிபெற்ற தேரர்கள் (ஸ்தவிரர்கள்) செய்து வந்தனர். மேலும் பிக்குகளின் நெறிகளையும், பயிற்சியையும் பற்றி இளைஞர்கள் சிறு வயதிலேயே நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும் சங்கம் உதவி வந்தது. இலங்கை, பர்மா முதலிய நாடுகளில் சங்கம் பொது மக்களின் கல்விக்கும் இடைவிடாது தொண்டு புரிந்து வந்திருக்கிறது.

துறவு வாழ்க்கையை மேற்கொண்ட பிக்குகள் தங்கள் உடை, உணவு, உறையுள் முதலியவற்றிற்காக நாள் தோறும் கவலைகொண்டு திரியாமல், அவர்கள் உயர்தர வாழ்க்கையில் பயிற்சி பெறுவதையே தொழிலாய்க் கொண்டிருக்கச் சங்கமும் பேருதவியாக விளங்கிவந்தது.

பௌத்த சங்கம் குருமார்களுடைய கூட்டமன்று; அதில் பூசாரிகளும், புரோகிதர்களும் இல்லை; அது பயிற்சிபெறும் துறவிகளின் கூட்டமேயாகும். எத்தனை ஆண்டுகளாகப் பயிற்சிபெற்று வந்தார்கள் என்பதையும், விநய ஒழுக்கத்தில் எவ்வளவு முன்னேறியிருந்தார்கள் என்பதையும் ஆதாரமாய்க் கொண்டே பிக்குகள் மதிக்கப்பெற்று வந்தார்கள்.

சங்கத்தின் பெருமை

சங்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே பிக்குகளுக்குச் சமூகத்தில் மிக உயர்ந்த மதிப்பு இருந்து வந்தது. பிக்குகளும், பிக்குணிகளும் பாடிய பாடல்கள் அடங்கிய 'தேரகாதை', 'தேரிகாதை'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/183&oldid=1386855" இலிருந்து மீள்விக்கப்பட்டது