பக்கம்:பௌத்த தருமம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

பெளத்த தருமம்



வெண் சங்கைப்போல் அது பரிசுத்தமானது, பிரகாசமானது; துவேஷம், மடிமை, பேராசை ஆகிய கறைகளில்லாத வேலை அது.

தருமத்தை அவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். அவர்கள் உபதேசிக்கும் தரும் முறைப்படியே தாங்களும் நடந்து வருகிறார்கள். கல்வி நிறைந்து, புலன்களை அடக்கி, எப்பொழுதும் அவர்கள் விழிப்போடு விளங்குகிறார்கள்.

அவர்களையா நான் நேசிக்கக் கூடாது? அவர்கள் வெளியே அலைந்து திரிகிறார்கள்; எவ்வளவு அறிவுடன், எவ்வளவு தாழ்மையுடன், எவ்வளவு விநயமாக அவர்கள் நடந்து செல்கிறார்கள்! ஒவ்வொரு துக்கத்தையும், சோகத்தையும் முடிவு கண்டவர்கள் அவர்கள்! அப்பா, அவர்கள் கிராமத்துத் தெருவில் அடிவைத்துச் செல்லும் அழகினைப் பார்!

கவிழ்ந்த (முகத்துடன்) கண்கள் தரையைப் பார்க்கின்றன; அவர்களின் நடை அளவோடு உறுதியாகவுள்ளது. இடதுபுறமோ, வலதுபுறமோ திரும்பிப் பாராமல், அவர்கள் தியானம் செய்கிறார்கள். அழிந்து மறையக்கூடிய செல்வத்தை அவர்கள் மண்ணுலகில் சேர்த்து வைப்பதில்லை; அவர்களுடைய உள்ளொளி உன்னதமானது!

அவர்கள் ஏழைகளே, ஆயினும் தங்கத்தையும் வெள்ளியையும் தீண்டுவதில்லை; அவர்களுடைய சொற்பத் தேவைகள் அன்றாடம் பூர்த்தியாகிவிடுகின்றன. அவர்கள் எத்தனையோ நாடுகள் நகரங்களிலிருந்து சங்கத்தில் வந்து சேருகின்றனர்; அன்புமயமான செயல்களே அவர்களைப் புனித முறையிலே ஒன்று சேர்த்துப் பிணித்திருக்கின்றன.

தந்தை - பெண்ணே, நீ பிறந்த நாள், அதிருஷ்ட நாள்தான்! திரிசரணங்களில் உனது நம்பிக்கை உறுதியாக அமைந்துள்ளது. இவர்கள் செய்வதும் ஒருவகை விவசாயமே! இதிலே நல்ல விளைவு கண்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/185&oldid=1386865" இலிருந்து மீள்விக்கப்பட்டது