பக்கம்:பௌத்த தருமம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

பெளத்த தருமம்


விஷயங்களை ஒவ்வொன்றாகச் சொல்வார். கூட்டத்தில் எவரேனும் அவைகளில் எந்தக் குற்றத்தை யாவது செய்திருந்தால், அவர் அதை அப்போது வெளிப்படையாகக் கூறி மன்னிப்பும் கோர வேண்டும். பிக்குகள் தம் குறைகளைத் தாமே உணர்ந்து சீர்திருந்துவதற்காகப் புத்தர் பிரான் இந்தப் பிராதி மோட்சத்தை ஏற்பாடு செய்திருந்தார். அது 2,500 ஆண்டுகளாக இன்றுவரை, பௌத்தர்களுள்ள இடங்களிலே, அவர் நியமித்த முறையிலேயே நிகழ்ந்து வருகின்றது. பிராதி மோட்சம் (பாதி-மொக்கம்) என்பது ஒருவர் தம் பாவங்கள் அல்லது குற்றங்களிலிருந்து விமோசனம் பெறுதலே. குற்றங்களை மறவாமல் நினைவில் வைத்திருந்து சங்கத்தின் முன்பாகக் கூறுவதில் அவைகளின் பாரம் அல்லது சுமை குறைகின்றது.

சங்கத்திலே நான்கு குற்றங்கள் மிகவும் கொடியவையாகக் கருதப்படும், பிருமசரிய விரதம் (சிற்றின்பத்தை அறவே விலக்கியிருத்தல்) பங்கமாதல், பலாத்காரம் அல்லது ஏமாற்றுச் செய்து பிறர் பொருளை அபகரித்தல், உயிர்க்கொலை (இங்கே முக்கியமாக மானிட உயிரே கருதப்படும்), அருகத்தாகிவிட்டதாகவோ, இருத்தி ஆற்றல்களைப் பெற்றிருப்பதாகவோ பொய்யுரைத்தல் ஆகிய நான்குமே அப்பெருங் குற்றங்கள். இவைகளில் ஒரு குற்றத்திற்காக மட்டுமே ஒருவரைச் சங்கத்திலிருந்து வெளியேற்றிவிடலாம்.

பிக்குகளின் ஒழுக்கத்தைக் கண்காணித்து வருவதற்குச் சங்கத்தின் பிராதி மோட்சம் மிக்க உதவியாகின்றது. அதைத் தவிர, பௌத்த நாடுகளில் பொது மக்களும் உன்னிப்பாய்க் கவனித்து வருவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/191&oldid=1386814" இலிருந்து மீள்விக்கப்பட்டது