பக்கம்:பௌத்த தருமம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

பெளத்த தருமம்


போதிதருமருக்கு ஆதாரமாயிருந்த நூல்களுள் ‘இலங்காவதார சூத்திரம்’ ஒன்று. அதிலே காணப்பெறும் கீழ்க்கண்ட வாக்கியங்கள் தியான மார்க்கத்தின் சிறப்பை எடுத்துக் காட்டுபவை:

‘உண்மையை உணராமல் வீணாக விவாதம் செய்வோர் விஞ்ஞானங்களாகிய (உலகியல் அறிவுகளாகிய) காட்டில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து, தங்களுடைய ‘நான்’ என்னும் அகம்-பிருமவாதத்திற்கு நியாயம் காட்ட முயன்று மறைந்து விடுவார்கள். உங்களுடைய உள்ளுணர்வின் அடித்தலத்திலே உணரப்படும் “அகம்” (அந்தராத்மா) தனது பரிசுத்த நிலையிலுள்ளது; அதுவே ததாகத-கர்ப்பம் (புத்தக் கரு), அது அறிவால் மட்டும் ஆராய்ந்து கொண்டிருப்பவர் காணக்கூடிய தன்று.’

பிற்காலத்தில் சில பௌத்தர்கள் தாந்திரிக முறைகளை மேற்கொண்டு, அவற்றின் மூலம் அரிய சித்துக்களை அடையலாம் என்று முயன்று வந்தனர். அவர்களுடைய முயற்சியால் புத்த வணக்கமும், சக்தியாகக் கருதப்படும் தாராதேவி வணக்கமும், வஜ்ர வணக்கமும் ஏற்பட்டன. இத் தெய்வங்களுக்காகப் பல ஆலயங்களும் அமைக்கப் பெற்றன. பொது மக்களின் உள்ளங்களைக் கவருவதற்கு ஆலயங்கள், சிலைகள், திருவிழாக்கள், ஊர்வலங்கள் முதலியவைகள் மிகவும் பயன்பட்டு வந்தன. இவ்வாறு திபேத்து முதல் சீனா வரையிலும் பௌத்தர்களிடையே சில பகுதியினர் சிலைகள் முதலியவற்றை வணங்குவது வழக்கமாயிற்று. சீனாவிலும் ஜப்பானிலும் அமிதாப புத்தர் என்ற சிலையின் வணக்கம் மிகப் பிரபலமா யிருந்தது. அமிதாப என்றால் அமிதமான, அல்லது எல்லையற்ற பிரபை அல்லது ஜோதி என்று பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/203&oldid=1386857" இலிருந்து மீள்விக்கப்பட்டது