பக்கம்:பௌத்த தருமம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

பௌத்த தருமம்


சீலக்கந்த வக்கத்தில் அருகத்து நிலை அடைவதற்குரிய சீலம், சமாதி, பிரஞ்ஞை முதலியவை கூறப்பட்டிருக்கின்றன. புத்தர் காலத்துப் பிராமணருடைய ஒழுக்க முறைகளில் காணப்பெற்ற தவறுகளையும் குறைகளையும் அவர் எடுத்துக் காட்டிப் பௌத்த பிக்குகள் சீலத்தைப் பேண வேண்டிய முறைகளை விளக்கிக் கூறியுள்ள வாசகங்கள் இந்த வக்கத்திலுள்ள ‘பிரம்மஜால சுத்தம்’ ‘தேவிஜ்ஜ சுத்தம்' ’ஆகிய இரண்டு சுத்தங்களில் இருக்கின்றன. மற்றவைகளில் துறவிகள் அடையும் பேறுகள், உபாசகர்கள் கடமைகள், வைதிக கருமங்களாகிய யாகம் முதலியவை, நால்வகை வாய்மைகள், சாதி முறை, உயிர்ப்பலி மறுப்பு, தெய்வீக தரிசனம், உயிர் - உடல் பற்றிய விசாரம், உடலைத் துன்புறுத்தித் தவம் செய்தலைக் கண்டித்தல், ஆன்மா, ஆசிரியர் கடமைகள் முதலிய விஷயங்கள் விவரிக்கப் பெற்றுள்ளன.

மகா வக்கத்தில் பத்துச் சூத்திரங்கள் அமைந்துள்ளன. அவைகளில் புத்தருடைய பூர்வ ஜன்ம வரலாறுகள் சிலவும், காரண – காரியத் தொடர்புகளும், ஆன்மா பற்றிய தத்துவங்களும், புத்தருடைய அந்திம கால நிகழ்ச்சிகளும், அவர் ஓர் இயக்கனுக்குக் கூறிய கதையும், தேவர்கள் புத்தரைத் தரிசித்த வரலாறும், சக்கன் என்னும் தேவனுடைய பத்துக் கேள்விகளுக்கு அவர் கூறிய மறுமொழிகளும், நான்கு தியானங்கள் பற்றியும், பாயாசி என்பவரைச் சங்கத்திலே சேர்த்த விவரமும் குறிக்கப்பட்டுள்ளன. அவைகளில் மிக முக்கியமானது புத்தருடைய அந்திம கால நிகழ்ச்சிகளைக் கூறும் ‘மகா - பரி - நிருவாண சூத்திர’ மாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/207&oldid=1386866" இலிருந்து மீள்விக்கப்பட்டது