பக்கம்:பௌத்த தருமம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பெளத்த தருமம்


மெய்யறிவு பெற்ற புத்தருடைய உபதேசங்களின் உயர்வுக்கு முதன்மையான காரணம், அவை அனைத்தும் அவருடைய சொந்த அநுபவத்திலிருந்து விளைந்தவை என்பது. தாம் மெய்யாகக் கண்டவற்றைத் தவிர, அவர் அநுமானங்களையோ, சாத்திரங்களையோ ஆதாரமாய்க் கூறவில்லை. தாம் கூறியவைகளை மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வற்புறுத்தவில்லை; அவைகளைத் தத்தம் அறிவு அநுபவங்களைக் கொண்டு ஆராய்ந்து பார்த்த பிறகே ஏற்றுக்கொள்ளும்படி சொல்லிவந்தார்.

புத்தர் சரிதையிலே இயற்கைக்கு மாறுதலான புராண வரலாறுகளும், மானிட இயல்புக்கு மேம்பட்ட ஆற்றல்களைப்பற்றிய செய்திகளும் பல குறிக்கப் பெற்றுள்ளன. ஆயினும் அவைகளை யெல்லாம் புத்தர் வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களாகக் கொள்ளவேண்டியதில்லை. பகுத்தறிவு வளர்ந்து பெருகிவரும் இக்காலத்தில், பலர், அவைகளை ஒதுக்கிவிட்டு, முக்கியமான சரித்திர சம்பவங்களையே எடுத்துக்கொள்ளக் கூடும்.

உலகின் பல பாகங்களில் புத்தருடைய தாது கோபங்களையும், சிலைகளையும் பெளத்தர்கள் வணங்குகிறார்கள் என்பதைக் கொண்டும் அவரை ஓர் அவதார புருஷர் என்று கொள்ளவேண்டியதில்லை. மக்களின் வணக்கம் கட்டிடங்களுக்கும் கற்சிலைகளுக்கும் அன்று; அவை குறிக்கும் பெருமானின் சீரிய ஒழுக்கம், நல்லுபதேசங்கள் ஆகியவற்றிற்கே யாகும். இதுபோன்றதுதான், ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்று புத்தரைச் சரணமடைதலும், போதியடைந்து அறவழியை உணர்த்திய புத்தரை அடைக்கலமாகக் கொண்டு நன்றி தெரிவித்தலே இச்சரண-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/21&oldid=1386761" இலிருந்து மீள்விக்கப்பட்டது