பக்கம்:பௌத்த தருமம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

பௌத்த தருமம்


தொகுதியிலிருந்து பல கதைகள், இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளிலேயும் பரவி, வேறு ஆசிரியர்களின் பெயரால் உலவிவருகின்றன. ஜாதகக் கதைகளிலே தலைசிறந்த காவியமாகக் கருதப்படுவது வெஸ்ஸந்தரன் தான் பெற்றிருந்த செல்வங்களையும், மனைவி, மக்களையும் தானமாகக் கொடுக்கும் கதை. ஜாதகக் கதைகள் பல பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப் பெற்றிருக்கின்றன.

நித்தேசம் : சுத்த நிபாதத்தின் முக்கியமான பகுதியில் சிலவற்றிற்கு இது விளக்கமாகும். ‘நித் தேசம்’ என்பதற்கு விளக்கம் என்று பொருள்.

படிஸம் பிதா மக்கம் : இது பொருள்களைப் பிரித்து அறியும் மார்க்கத்தைக் கூறுவது. இதில் 3 பகுதிகளுண்டு.

அவதானம் : செய்யுள் வடிவில் அருகத்துகளுடைய அரிய செயல்கள் பலவற்றையும், அவர்களுடைய பூர்வ ஜன்ம வரலாறுகளையும் கதைகளாகக் கூறுவது இந்நூல். இதில் சாரீபுத்திரர், மௌத்கல்யாயனர், காசியபர், அநுருத்தர், ஆனந்தர், உபாலி, இராகுலர், புத்தரின் சிற்றன்னை கௌதமி, க்ஷேமை, கிஸா கௌதமி முதலியோருடைய சரித்திரங்களையும் காணலாம். ‘அவதானம்’ என்றால் புகழுக்குரிய செயல் அல்லது வீரச் செயலாகும்.

புத்த வம்சம் : இதில் புத்தர் வரலாறும், முந்திய 24 புத்தர்களுடைய சரித்திரங்களும் காணப்பெறுகின்றன.

சரியா பிடகம் : செய்யுள் வடிவான ஜாதகக் கதைகளில் 35 இதிலே சுருக்கி அமைக்கப் பெற்றிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/215&oldid=1386889" இலிருந்து மீள்விக்கப்பட்டது