பக்கம்:பௌத்த தருமம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

பெளத்த தருமம்


 அவைகளில் ‘மிலிந்தன் பிரச்னைகள்’ (மிலிந்த பந்ஹா) என்ற நூல் பாலி மொழியில் திரி பிடகங்களுக்குப் பின்னால் தோன்றிய நூல்களிலே முதன்மையானது என்று எங்கும் போற்றப் பெறுகின்றது. உண்மையிலேயே இது பெரும் புகழுக்குரிய நூல்தான். கி.மு. முதல் நூற்றாண்டிலே இந்தியா வின் வடமேற்குப் பகுதியையும் ஆப்கானிஸ்தானத்தையும் ஆண்டுகொண்டிருந்த மிலிந்தன் (மினந்தர்) என்ற யவன மன்னனுடைய வினாக்களும், பெளத்த பிக்குவான நாகசேனருடைய விடைகளும் இதில் அடங்கியுள்ளன. மிலிந்தன் அறிவும், ஆற்றலும், அறவழியில் பற்றுமுள்ளவன். அவனுக்கு முன்னாலேயே கிரேக்க நாட்டில் பெளத்த தருமம் பிரசாரம் செய்யப் பெற்றிருந்தது. அத்தருமத்தைப்பற்றி அவன் மனத்தில் பல ஐயப்பாடுகள் நிறைந்திருந்தன. அவைகளை நீக்கி உண்மையை உணர்ந்து கொள்வதற்காக அவன் பல முயற்சிகள் செய்து கொண்டேயிருந்தான். ஆனால் அதற்கேற்ற ஆசிரியர் மட்டும் அகப்படவில்லை. 'இந்தியாவே வெறுமையாய்க் கிடக்கின்றது...என் ஐயங்களைத் தீர்த்து வைக்கும் ஒரு துறவியையோ, பிராமணரையோ காண முடியவில்லையே !' என்று அவன் வருந்திக் கொண்டிருந்தான். திடீரென்று ஒரு நாள் மகா மேதையாகிய பிக்கு நாகசேனர் தெருவில் பிட்சையேற்றுக் கொண்டிருக்கையில், அவன் அவருடைய அடக்கத்தையும், முகப் பொலிவையும் கண்டு பரசவமானன். மறுநாள் முதலே ஐந்நூறு யவனர்களை அழைத்துக்கொண்டு அவன் அவரிடம் சென்று விவாதிக்கலானான். விவாதம் ‘ராஜவாத’ முறையிலன்றிப் ‘பண்டிதவாத’ முறையிலேயே நிகழ்ந்தது. இறுதியில் மிலிந்தன், ஐயம் திரிபுகள் யாவும் தீர்ந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/219&oldid=1386871" இலிருந்து மீள்விக்கப்பட்டது