பக்கம்:பௌத்த தருமம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பௌத்த தருமம்

மாறுதல், அழிவு என்னும் விதிகளுக்கு உட்பட்டவைகளே. அவர் கருத்துப்படி நிருவாணம் ஒன்றே நிலையானது. மற்றவை யெல்லாம் நிலையற்றவை. ஆதலால் புத்தர் சரிதையிலும், மொழிகளிலும், ஏலாதனவற்றை ஒதுக்கிவிட்டு, அடிப்படையாக, ஆணித் தரமாக, அவர் கூறியுள்ள முக்கியமான உறுதிப்பாடுகளை ஆராய்ந்து உண்மை காண்பதே நன்மை பயக்கும். அவருடைய பெளத்த தருமம் விவாதத்திற்காக அமைந்ததன்று, அது வாழும் வகை. எனவே அதன்படி வாழ்ந்து பார்த்தாலே அதன் உண்மையை உய்த்துணர முடியும்.

புத்தர் பெருமான் நூல்கள் எதையும் எழுதி வைக்கவில்லை. பல இடங்களுக்கு யாத்திரை சென்று, ஆங்காங்கே, அவ்வப்போது, அவர் கூறிய திருமொழிகளைக் கேட்டிருந்த அடியார்கள் பின்னால் அவைகளைத் தொகுத்து வைத்தார்கள். பெருமாைேடு இடைவிடாது வாழ்ந்து வந்த ஆனந்தர், உபாலி, மகா காசியபர் ஆகியோர் பெளத்த பிக்குகளின் பேரவையிலே அவைகளை முதலில் கூறி, யாவரும் அவைகளை ஏற்றுக்கொண்ட பின்பு, அவைகளைத் தொகுத்து வைத்தார்கள். பெருமான் பூத உடலோடு இருக்கும் போதே அவருடைய உரையாடல்கள் உடனுக்குடன் குறித்து வைக்கப் பெறவில்லை. இதனால்தான் பின்னால் தொகுக்கப் பெற்ற சூத்திரம் ஒவ்வொன்றிலும், ஆரம்பத்தில், ‘ஏவம் மா சுதம்-இவ்வாறு நான் கேளவியுற்றேன்’ என்று கூறப்பட்டுளது. அந்தச் சூத்திரத்தைக் கூறியவர் தாம் கேட்டதைக் கூறினார்; அவர் கூறியது பின்னால் குறிக்கப் பெற்றது. இத்தைய சூத்திரங்கள் யாவும் ‘திரிபிடகங்கள்’ என்று மூன்று பிரிவுகளாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/23&oldid=1387248" இலிருந்து மீள்விக்கப்பட்டது