பக்கம்:பௌத்த தருமம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

பெளத்த தருமம்


செய்து, சொல்லொணாத் துயரங்களை எல்லாம் அநுபவித்தார். முடிவில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து மெய்ஞ்ஞானம் பெற்றவுடன், அவை அவருக்குத் தெளிவாகப் புலப்பட்டன. அவர் கருத்துப்படி துக்கத்தையும், துக்க காரணத்தையும், துக்க நிவாரணத்தையும் பற்றி மேலே குறித்துள்ளோம். இனி துக்க நிவாரண மார்க்கத்தைப் பற்றிக் கவனிப்போம்.

பௌத்த தருமத்திலும், புத்தர் பெருமான் உபதேசங்களிலும் இந்தத் துக்க நிவாரண மார்க்கமே முதன்மையான சிறப்புடையது. ‘சத்தியமே ஜயம் !’ என்றும், ‘அன்புடைமையே அருந்தவம்!’ என்றும், ‘எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்!’ என்றும் வெறும் இலட்சியங்களைக் கூறி அவர் விட்டுவிடவில்லை. யாதொரு துக்கமும் அண்ட முடியாத, ஒப்பற்ற, அழிவில்லாத, சாந்தி நிறைந்த இன்பகரமான நிலையை அடைவதற்கு அவர் வழியைக் கூறியுள்ளார். அந்த வழியிலே சென்று மேற்கொண்டு பிறவியில்லாத பெரும் பதத்தை அடைய விரும்புவோர், முதலிலிருந்து முடிவுவரை என்னென்ன முறைகளைக் கையாள வேண்டும் என்பது பற்றி அவர் விரிவாக வகுத்துக் கூறியுள்ளார். மனிதனின் முடிவான இலட்சியம் பிறவா நிலையாகிய நிருவாணம்—அதுவே விடுதலை, வீடு, பேரின்பம். அந்த நிலையை அடைவதற்குரிய வழி நிருவாண வழி.

நிருவாண வழி எளிதான வழியன்று. உலக போகங்களில் ஆழ்ந்து , ‘நான்’ என்னும் முதலையின் வாயில் சிக்கிக் கொண்டு உழல்வதுதான் எளிதான வழி. அவ்வழியை விட்டுக் கடைத்தேற்றம் பெறுவது எளிதான வழியன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/35&oldid=1386792" இலிருந்து மீள்விக்கப்பட்டது