பக்கம்:பௌத்த தருமம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

பெளத்த தருமம்


‘மடிமையைக் கண்டு அஞ்சி. கருத்துடைமையில் களிப்படையும் பிக்கு தவறி விழ முடியாது - அவன் நிருவான மோட்சத்தின் அருகில் இருப்பவன்.’[1]

இவ்வாறு பகவர் அருளியுள்ளார்.

நிருவான வழியிலே செல்பவன் சீலம்- ஒழுக்கம்-நிறைந்தவனாயிருக்க வேண்டும்; ஒழுக்கத்தை உயிரைவிட மேலாகக் கருதவேண்டும். ஒழுக்கமே விழுப்பம் [2]தரும். நல்வாழ்வுக்கு-இன்பத்திற்கு-வித்து ஒழுக்கமே. ஒழுக்கமுடையவன் திவினைகளைத் தீயைப் பார்க்கினும் அதிகமாக அஞ்சி ஒதுங்குவான்; நல்வினைகளைப் போற்றிச் செய்து வருவான்.

வினைகள் பத்து; அவை மூவகைப்படும். உள்ளத்தில் தோன்றும் தீவினைகள் மூன்று: வெஃகல் (பிறர் பொருளை விரும்புதல்), வெகுளல் ( கோபம் ), பொல்லாக் காட்சி ( உண்மையை அறியாது மயங்குதல்). வாக்கில் தோன்றும் தீவினைகள் நான்கு : பொய், குறளை ( கோட் சொல்லுதல்), கடுஞ்சொல், பயனில் சொல் (வீண் பேச்சு). உடம்பில் தோன்றும் தீவினைகள் மூன்று: கொலை, களவு, காமம்.

மேலே கூறிய பத்துத் தீவினைகளையும் நீக்கிச் சீலங்களை மேற்கொண்டு; தானம் முதலிய நற்பணிகளைச் செய்து வருதல் நல்வினைகளாம். சீலங்களைப் பேணுதலே நிருவான வழியில் முதற்படி, சீலங்கள் கோணினால், எல்லாம் கோணிவிடும். சீலங்களில் தவறியவன் .பெளத்த தருமத்திற்கே உரியவனல்லன்.


  1. * ‘தம்மபதம்’
  2. ↑ விழுப்பம் - மேன்மை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/37&oldid=1387318" இலிருந்து மீள்விக்கப்பட்டது