பக்கம்:பௌத்த தருமம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

பெளத்த தருமம்


 வரவும் வேண்டும். அதுவே இவ்வாழ்க்கையில் நாம் ஆற்ற வேண்டிய அருந் தவம்.


பெளத்த தருமத்தின் திட்டங்கள் ஏட்டுச் சுரைக்காய்களல்ல; அவை ஒவ்வொன்றும், வாழ்விலே, செயலிலே கடைப்பிடிக்க வேண்டியது. எனவே கொல்லாமை என்ற விதியை, ஒருவன் தன் உயிரை இழக்க நேர்ந்தாலும், பின்பற்றியாக வேண்டும். காடுகளில் வசிக்கும் பிக்குகள் கூடக் கொடிய விலங்குகளையோ, விஷப் பாம்புகளையோ கொல்லுதல் ஆகாது. உயிரைக் காக்கவேண்டிய மனிதன் உயிர்வதை செய்யலாகாது. உயிர்கள் உயிர்களை உண்ணக் கூடாது. ஆறறிவு பெற்ற மனிதன், மனப் பண்பாடுகள் நிறைந்த மனிதன், மற்றெல்லா உயிர்களுக்கும் நண்பனாக விளங்க வேண்டும். அவன் அகத்திலே அன்பு அரும்பினால் தான், தருமம் மலரும். அகத்திலே அன்பில்லாத உயிர்வாழ்க்கை கற்பாறைமீது முளைத்த மரம்போல் பட்டுவிடும். அருளில்லாதவன் செய்யும் அறம் மனத் தெளிவில்லாதவன் மெய்ப்பொருளைக் கண்டு பிடிப்பது போலவே முடியும்.


‘அறவினை யாதெனில் கொல்லாமை’ என்றார் வள்ளுவர். 'எல்லா இடத்தும் கொலைதீது' என்றும், ‘திரு ஒக்கும் தீதில் ஒழுக்கம்' என்றும் ‘நான்மணிக் கடிகை’' கூறுகின்றது. இதேபோலப் புத்தர் பெருமானும் பன்முறை கூறி வந்திருக்கிறார். உயிரைப் பலிகொடுத்துச் செய்யும் யாகங்களை அவர் தடுத்து வந்தார். ஆயினும் எக்காரணத்தாலோ, பிற்காலத்தில், பெளத்தர்கள் நிறைந்துள்ள நாடுகளில், கொலை மறுத்தல் நிலைத்திருந்த போதிலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/67&oldid=1387034" இலிருந்து மீள்விக்கப்பட்டது