பக்கம்:பௌத்த தருமம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஷ்டாங்க மார்க்கம்

83


புத்தர் காட்டும் வழி

‘ஒரே ஒரு விஷயத்தைத்தான் நான் போதிக்கிறேன்—துக்கமும், துக்கத்திலிருந்து நிவாரணமும்’ என்று புத்தர் பெருமான் கூறியுள்ளார். நாற்பத்தைந்து ஆண்டுகளாக அவர் பாரத நாட்டில் ஊர் ஊராக யாத்திரை செய்து அருளிய உபதேசங்களைப் பார்ப்பவர்கள் இது உண்மைதான் என்று கண்டு கொள்ளக்கூடும்.

‘நோய் நாடி, நோய்முதல் நாடி, அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’

என்று வள்ளுவர் கூறியிருப்பது போலவே, பிறவிப்பிணி மருத்துவரான புத்தர், முதலில் மக்களின் நோயை அறிந்து, அதன் காரணத்தை ஆராய்ந்து, அதற்குப் பரிகாரமான மருந்தையும் கண்டு, அம்மருந்தை உட்கொள்ள வேண்டிய முறையையும் வகுத்துள்ளார்.

மக்களிடம் அவர் கண்ட நோய் துக்கம்; அதன் காரணம் அறியாமையிலிருந்து தோன்றும் அவா; அதற்குப் பரிகாரம் அறியாமை, அவா முதலிய பன்னிரு சார்புகளையும் அழித்தல்; பரிகாரத்தை நிறைவேற்றுவதற்குரிய வழி அஷ்டாங்க மார்க்கமும், மேலே விவரித்துள்ள இருபத்தொன்பது தத்துவங்களும்.

துக்கம் என்ற நோயைப் பற்றி மக்கள் தாமாகவே கண்டு கொள்ளக்கூடும். ஆனால் அதற்குரிய காரணத்தையும், பரிகாரத்தையும் கண்டு பிடித்ததே புத்தரின் பெருமையாகும்.

நோயின் முதலை நாடும்[1] பொழுது, உலகில் எல்லாப் பொருள்களும், எல்லா உயிர்களும் ஹேது


  1. முதலை - காரணத்தை ; நாடும் - ஆராயும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/88&oldid=1386984" இலிருந்து மீள்விக்கப்பட்டது