பக்கம்:மகான் குரு நானக்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

மகான் குருநானக்


மேதாகலுராய் தனது மகள் பீபி நானகியை, சுல்தான்பூர் ஆளுநராக இருந்த தெளலத்கான் லோடியிடம் அமைச்சராக இருந்த திவான் ஜெய்ராம் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தார். பீபி நானகி செல்வச் சீமாட்டி நல்ல செல்வாக்கு படைத்த குடும்பத்தில் வாழ்ந்து வந்தார். அந்த அம்மையாருக்குத் தன் தம்பியின் மீது அளவற்ற பாசம் உடன்பிறப்பல்லவா?

தனது தம்பி நானக், பெற்றோரை நல்லபடியாக வைத்திருக்க வில்லையே என்ற கவலை. அதனால், தம்பியை தனது வீட்டுக்கு அழைத்துவந்து, கணவரிடம் கூறி, கவர்னரிடம் ஏதாவதொரு நல்ல வேலையை வாங்கிக் கொடுத்து, தாய்வீட்டை நன்னிலைக்குக் கொண்டு வரலாமே என்று அவர் திட்டமிட்டார். தாள்வாண்டிக்கு வந்தார் தமக்கை தந்தையிடம் தனது எண்ணத்தை எடுத்துரைத்தார். அப்பா சம்மதம் தந்தார். அதனால் தம்பியை அழைத்துக் கொண்டு சுல்தான்பூர் வரத் திட்டமிட்டார் பீபி நானகி.

தாள்வாண்டி ஊர்த் தலைவர் ராய்புலார், நானக்கின் நெருங்கிய நண்பர் மட்டுமல்லவே - அவர் ஒர் அவதார மனிதர் என்ற நம்பிக்கையைக் கண்ணால் கண்டு ஊராருக்கு உரைத்தவர் அல்லவா? அப்படிப்பட்ட தனது நண்பர், தம்மை விட்டுப் பிரிந்து தனது தமக்கை வீடு செல்வதை எண்ணி வருத்தப்பட்டு, தமது வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்று, 'எனக்கு தங்களது வாழ்த்தும் அறிவுரையும் வழங்கி விட்டுச் செல்ல வேண்டும் என்று கண்ணீர் தளும்ப, தழதழத்தக் குரலில் கேட்டுக் கொண்டார்.

"அன்பரே மக்களுக்கு உண்மையோடு தொண்டு செய்யுங்கள். யாருக்கு உங்களது உதவி தேவையோ அவர்களுக்குத் தவறாமல் உதவுங்கள். துன்பப்படும் மக்களின் துயர் துடைக்கக் கவனம் செலுத்துங்கள். தாங்கள் மக்களுக்கு வழங்கும் நீதியைக் கருணை யோடு வழங்குங்கள். இறைவனுடைய எல்லா நலமும் பெற்று நல்வாழ்வு பெறுவீர்கள்." என்ற அறிவுரையை ஊர்த் தலைவர் ராய்புலாருக்குக் கூறினார். பிறகு அவரிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு தனது தமக்கையுடன் சுல்தான்பூர் சென்றார்.