பக்கம்:மகான் குரு நானக்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

33


உடனே தன்னை மறந்து தானிய வகைகளை அளந்தது அளந்தபடியே தியானத்தில் மூழ்கிவிடுவார். அதற்குப் பிறகு அவரைச் சுற்றி என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்றே அவருக்குத் தெரியாது. தானியம் வாங்க வந்த மக்கள் சிலர் ஒழுங்காகப் பணத்தைப் போட்டுவிட்டுப் போய் விடுவார்கள். அதைப் பற்றியெல்லாம் நானக்குக்கு ஒன்றும் தெரியாது.

பதின்மூன்று என்ற எண்வரும்போது ஏன் தானியம் அளப்பதை அப்படியே நிறுத்தி விடுகிறார்? என்று மக்கள் யோசித்தார்கள். அந்த எண் வரும் நேரத்தில் மட்டும் ஏன் தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார்?

பஞ்சாபி மொழியில் பதின்மூன்று என்ற எண்ணுக்கு தேரா என்று பெயர். அந்தத் தேரா என்ற சொல்லுக்கு 'உன்னுடைய' அல்லது 'உங்களுடைய’ என்று பொருள். அதனால், தேரா என்று எண்ணும்போது, 'உன்னுடைய' என்னும் பொருளையே நானக் எண்ணிக் கொண்டார். அதாவது, கடவுளே! உன்னுடைய சேவைக்கே நான் இருக்கிறேன்' என்று நானக் நினைப்பார். அந்த நினைவு வந்ததும் தம்மை மறந்து அவர் தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார்! என்ற காரணம் பிறகுதான் எல்லாருக்கும் தெரிய வந்தது.

நாட்கள் இவ்வாறு சென்றன. தானியங்களை விற்றதற்கோ, அதற்கு வசூலான பணத்திற்கோ கணக்கு வழக்கில்லை. கடவுளின் சேவைதான் தானியத்தை அளந்து மக்களுக்குக் கொடுப்பது என்றெண்ணிய நானக்குக்கு கணக்கு எழுத நேரம் ஏது? அல்லது கணக்கு எடுக்க வைக்க காலம் ஏது?

கவர்னருக்கு இந்தச் செய்திகள் எல்லாம் தெரிந்தது. தானியக் களஞ்சியத்துக் கணக்குகளை எடுக்குமாறு கவர்னர் உத்தரவிட்டார். அரசு அதிகாரிகள் களஞ்சியத்திற்கு வந்து கணக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். இதைக் கண்ட நானக், களஞ்சியத்தை விட்டே வெளியேறிவிட்டார்.

களஞ்சியத்தில் கணக்கு எடுக்கச் சென்ற அதிகாரிகள். தானிய வகைகள் மலைமலையாகக் குவிந்து கிடப்பதைக் கண்டார்கள்.