பக்கம்:மகான் குரு நானக்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

41


ரூபாய் இசைக் கருவியை கிழவனிடம் வாங்கிக் கொண்டு திரும்பி வந்த மர்தனாவிடம் அதை மீட்டு, வாசி என்றார் நானக், குருவே, எனக்கு அந்தக் கருவியை வாசிக்கத் தெரியாது என்றான் மர்தானா!

அது ஒன்றும் கடினமான செயலன்று. ரூபாய் இசைக் கருவியில் உள்ள கம்பிகளில் உனது விரல்களை வைத்து அவற்றை அசையும்படி செய். அதுபோதும் என்றார் குருநானக்.

மர்தானா, குரு கூறியபடியே செய்தான்! இசை நாதம் வெள்ளம் போல் பெருகிற்று. ரூபாய் கருவியை தனக்கு வாசிக்கத் தெரியாது என்று மர்தானா கூறினானே. இப்போது எப்படி அவனால் அதை வாசிக்க முடிந்தது குருநானக்கின் அற்புதக் கருணையால்தான் மர்தானாவினால் அக்கருவியை வாசிக்க முடிந்தது.

குருநானக்கும், மர்தானாவும் அன்றிரவு அமெனாபாத் என்று இன்றைக்கும் அழைக்கப்பட்டு வரும் அன்றைய சைதாபாத் என்ற பெயருடைய நகரை வந்தடைந்து, பாய்லாலு என்ற பெயருடைய ஒரு தச்சன் வீட்டிலே தங்கினார்கள். யார் இந்த பாய்லாலு?

சைதாபாத் என்ற அந்த நகரில் மர வேலைகளைச் செய்து வரும் தச்சன் அவன். பெயர் பாய்லாலு. ஏழைகளிலேயே அவன் பரம ஏழை எவ்வளவுதான் அவன் வியர்வையை சிந்தி வேலை செய்தாலும், வயிராற உணவு உண்ணும் வருமானம் அவனுக்கு வருவது அரிது. ஆனால், பாய்லாலுவுக்கு நானக் என்றால் யார்? எப்படிப்பட்ட நேர்மையாளர் என்பதைப் பற்றிச் சுல்தான் பூரிலே உள்ள அவனது உறவினன் ஒருவர் சொல்லக் கேள்விப்பட்டதால், அவரிடம் மிகுந்த மரியாதை உடையவர் பாய்லாலு. அப்படிப்பட்ட ஏழையிலும் ஏழ்மையான அந்தத் தச்சன் வீட்டிலே தான் நானக்கும், மர்தானாவும் வந்து தங்கியிருந்தார்கள்.

அமெனாபாத் மாநிலத்திற்கு ஒரு கவர்னர். அவர் பெயர் மாலிக் பாகோ. நல்ல மனிதர்தான் என்று அந்த மாநில மக்களால் மரியாதையாகப் பாராட்டப்பட்டவர் அவர்.