பக்கம்:மகான் குரு நானக்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

மகான் குருநானக்


யும் கடந்த ஞானி அவர். அதனால் நானக் என்ற மகான், முஸ்லிம்களையும், இந்துக்களையும் ஒரே மாதிரியாகவே மதித்துப் பழகி வந்தார். இரண்டு மதங்களைச் சேர்ந்த மக்கள், பிரிவினைக்கு முன்பு சகோதரப் பாசத்தோடும், சமத்துவ மனப்பான்மையோடும் வாழ்ந்து கொண்டிருந்தபோது, சத்குரு நானக் மகான் அந்த இரு நாட்டு மக்களுக்குமே சீக்கிய சமய நெறிகளை போதித்திருக்கிறார். அதன் அடையாளமாக இன்றும் கர்தர்பூர் நகரம் பாகிஸ்தான் நாட்டில் செல்வாக்கோடு உள்ளதைப் பார்க்கிறோம். இதற்கு அடிப்படைக் காரணம் சத்குரு நானக், முஸ்லிம் பெருமக்களிடம் காட்டின மரியாதையும், மதிப்பும், நேசமும் பாசமும் தான்!

குருநானக், பல ஆண்டுகளாக இல்லற ஞானியாக வாழ்ந்தார். தம்மை நாடி வந்த மக்களுக்கு சீக்கிய சமய நெறியை உபதேசம் செய்து வந்தார். அதற்குப் பிறகு அந்த ஞானி தனது இரண்டாவது சமய நெறி பரப்பும் பயணத்தைத் துவக்கினார்.

இலாகூர், பாக்பத்தான், சியால்கோட் போன்ற பெரும் நகரங்களுக்குச் சென்றார். தனது தலையாய தெய்வீக நெறியான ஒன்றே தேவன், ஒன்றே கடவுள், ஒன்றே இறைவன் என்ற உண்மைக்குரிய ஆதாரங்களோடு ஆங்காங்கு வாழ்ந்த மக்களுக்கு ஞான போதனை செய்தார். அவரது அறிவுரை களையும், அறநெறிகளையும் மக்கள் கேட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

இதற்குப் பிறகு மீண்டும் சத்குரு கர்தர்பூர் வந்தார். குருத்துவார வளர்ச்சிகள் எவ்வாறுள்ளன என்பதைக் கண்டார். தனது குடும்பத்துடன் தங்கி குருத்துவாரம் வளர்ச்சிக்குரிய வழிகளை மேற்கொண்டும். கண்காணித்தும், விவசாயம் புரிந்தும் வந்தார் அவர்.