பக்கம்:மகான் குரு நானக்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

மகான் குருநானக்


சில நேரங்களில் ராஜாவும், வாணிகருமே அந்தந்த சிறப்புச் சம்பவங்களில் கலந்து கொண்டு திரும்புவதுமுண்டு. ராஜா அத்தகைய ஓர் ஆன்மீகவாதி மட்டுமன்று, சிறந்த இறைஞான சீலரும் கூட.

அத்தகைய ஆன்மீக பக்தருக்கு, பகீரத் வாணிகர், தாம் கேட்டறிந்த குருநானக்கின் அற்புதங்களையும், அவருடைய ஒருவனே இறைவன் என்ற தெய்வீகத் தத்துவங்களையும் ஒரு சமயம் தெரிவித்திருந்தார். அது முதல் சத்குரு நானக்கையும், அவரது இறைவழிபாடு ஞான நெறிகளையும் நேரில் கண்டறிந்து, அருளாசி பெற்றிட வேண்டும் என்ற தணியாத பக்தி தாகம் கொண்டிருந்தார் அந்தத் தீவுமன்னன்.

அதற்கு ஏற்றவாறு சத்குரு நானக் இராமேஸ்வரம் வருகை தந்துள்ள செய்தியை ராஜா அறிந்து மகிழ்ந்தார். அவர் வருகைக்காக ராஜாவும் எதிர்பார்த்திருந்தார். இந்த எண்ணச் சூழல் சத்குருவின் ஞானக் கண்ணுக்குப் புலப்பட்டதால் தான், ராமேஸ்வரம் கடற்கரையிலே நின்று கொண்டிருந்த குருநானக்குக்கு திடீரெனத் தனது நண்பரைப் பார்க்க வேண்டும் என்று கூறும் சிந்தனை உதயமானது.

சத்குரு நானக் சங்கல் தீபம் என்ற தீவுக்குத் தனது மாணவர்களுடன் போய்ச் சேர்ந்தார். குருநானக் வந்துள்ள செய்தியை முன்கூட்டியே அறிந்து கொண்ட ராஜா, அவரைச் சகல மரியாதைகளுடனும், தனது பரிவாரங்களுடனும் எதிர்கொண்டு சென்று வரவேற்றுக் கோலாகலமாக இறைவனது திருவிழாவைப் போலக் கொண்டாடி, ஞானமகானைத் தனது அரண்மனைக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.

சத்குரு அங்கே தங்கியிருந்த நாட்களில் தினந்தோறும் அந்த அரண்மனைத் திடலில் மக்களைத் திரட்டி தனது சீக்கிய மத நெறிகளை விளக்கினார். குருநானக் மீது ராஜா சிவநாத்துக்கு மிகுந்த மரியாதை, மதிப்பு, ஆன்மீக நேச பாசம் எல்லாம் உண்டு. என்றாலும் வந்திருப்பவர் உண்மையான குரு நானக்தானா? அல்லது அவர் பெயரால் யாராவது ஒரு போலிச் சாமியாரா? என்பதை ராஜா கண்டறிய விரும்பினார்.