பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

103

படி ஒதுங்கி வாழும்படி செய்ய வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு. இந்த எண்ணம் தோன்றியவுடனே முதல் வேலையாகப் பாண்டவர்களை அழைத்து வருமாறு தன் தூதுவர்களைப் பாஞ்சால நாட்டிற்கு அனுப்பினான், தூதுவர்கள் பாஞ்சால நாடு சென்று பெரிய தந்தையின் ஆணையைப் பாண்டவர்களிடம் தெரிவித்தனர். உடனே பாண்டவர்கள் துருபத மன்னனிடம் விடைபெற்றுக் கொண்டு திரெளபதி, தாய் குந்தி ஆகியவர்களோடு அத்தினாபுரம் வந்து சேர்ந்தனர்.

திருதராட்டிரன் அவர்களை அன்போடு வரவேற்று “அருமைப் புதல்வர்களே! உங்களுக்கு அறிவும் நினைவும், பெருகிய திறன் வாய்ந்த வாலிபப் பருவம் கிட்டிவிட்டது. இனி உங்கள் தந்தைக்குரிய நாட்டின் பகுதியை உங்களிடமே ஆள்வதற்கு ஒப்பித்து விடலாம் என்று நினைக்கிறேன். அதனை செவ்வனே ஆளும் பொறுப்பும் கடமையுணர்ச்சியும் உங்களுக்கு இருக்கிறது என்பதில் எனக்குப் பெரிதும் நம்பிக்கை உண்டு” -என்று கூறிப் பாண்டவர்களுக்குச் சேர வேண்டிய உடைமைகளை முறையாகப் பிரித்து அவர்களிடம் ஒப்படைத்து விட்டான். தருமன் முதலியவர்களும் தந்தைக்கு நன்றி செலுத்தி அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர். சில நாட்களுக்குப் பின் ஒரு நல்ல நாளில் தன் அலையிலுள்ள சான்றோர்களைக் கொண்டு பாண்டவர்களில் மூத்தவனாகிய தருமனுக்கு முடி சூட்டினான் திருதராட்டிரன். பாண்டவர்கள் பகுதியாகிய அரசுக்குத் தருமன் அரசனானான், அத்தினாபுரமே பாண்டவர்கள் அரசுக்கும் தலைநகரமாக இருந்தது.

தொடக்கத்தில் சில நாட்கள் துரியோதனாதியர் பாண்டவர்களின் நலத்தை வெறுக்காமல் நாட்களைக் கழித்தனர். பின்பு நாளாக ஆகப் பாண்டவர்களுக்குத் தொல்லைகளைச் செய்யத் தலைப்பட்டனர். திருதராட்டிரனோ தன் மக்கள் செய்யும் குற்றத்தை அறிந்தும் அறியாதவன் போல் வாளாவிருந்தான். ‘தீயோர்களை விட்டு விலகி